

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், வாவ்ரிங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ஜோகோவிச், பிரான்ஸ் வீரரான மான்பில்ஸை எதிர்த்து ஆடினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் இரண்டு செட்களையும் 6-3, 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப் பற்றினார். ஆனால் மூன்றாவது செட்டில் கடுமையாக போராடிய மோன்பில்ஸ் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார். ஆனால் நான்காவது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற ஜோகோவிச், 6-3, 6-2, 3-6, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றார்.
இப்போட்டி குறித்து நிருபர் களிடம் கூறிய ஜோகோவிச், “இன்றைய ஆட்டத்தில் மோன் பில்ஸ் மிகச் சிறப்பாக விளையா டினார். முதல் 2 செட்களை கைப்பற்றிய பிறகு நான் மூன்றாவது செட்டை வென்றிருக்க வேண்டும். ஆனால் அந்த செட்டை இழந்து மோன்பில்ஸுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துவிட்டேன். இதனால் அவர் மேலும் தன்னம் பிக்கை அடைந்து கடுமையாக போராடினார். நான்காவது செட்டில் அவரை வீழ்த்துவதற்கு கடுமையாக போராடவேண்டி இருந்தது” என்றார்.
இறுதிப் போட்டியில் ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சுவிட்சர் லாந்து வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொள்ள இருக்கிறார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்கா, 4-6, 7-5, 6-4, 6-2 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய வாவ்ரிங்கா, “நிஷிகோரி மிகச் சிறப்பாக ஆடி முதல் செட்டைக் கைப்பற்றினார். அது எனக்கு நெருக்கடியைத் தந்தது. அதிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவது கடினமாக இருந்தது. நிஷிகோரி பலவீனமடையும்வரை காத்தி ருந்து அவரை வீழ்த்தினேன். ஜோகோவிச்சுக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒருமுறை ஆடவிருப்பது சிறப்பானதாகும்” என்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 3 முறை அரை இறுதிச் சுற்றுவரை முன்னேறிய வாவ்ரிங்கா, முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற் றுள்ளார். வாவ்ரிங்காவும், ஜோகோ விச்சும் டென்னிஸ் களத்தில் மோத விருப்பது 24-வது முறையாகும். இதுவரை இவர்கள் மோதியுள்ள 23 ஆட்டங்களில் ஜோகோவிச் 19 முறையும், வாவ்ரிங்கா 4 முறையும் வென்றுள்ளனர்.