Published : 06 Sep 2014 07:00 PM
Last Updated : 06 Sep 2014 07:00 PM

காவல் நிலைய சித்ரவதைக்கு ஆளான பெண்ணுக்கு சென்னையில் சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸாரால் சித்ரவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் பெண்ணுக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

"நான் எனது கணவருடன் மதுரையில் வசிக்கிறேன். எனது தாயார் உடுமலைப்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் எனது தாயார் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார். உண்மையான கொலையாளிகளைப் பிடிப்பதற்கு பதிலாக, அப்பாவியான எனது தாயாரை கைது செய்த உடுமலைப்பேட்டை போலீஸார், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தி எனது தாயாரை சித்ரவதை செய்துள்ளனர். எனது தாயாரின் விரல்கள், நகங்களில் ஊசியைக் குத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். எனது தாயாரின் உடைகளை அகற்றிவிட்டு அவரை காவல் நிலையத்தில் தலைகீழாகக் கட்டி தொங்க விட்டுள்ளனர். பாலியல் ரீதியாகவும் எனது தாயார் மிகக் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்" என்று அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது கடந்த புதன்கிழமை விசாரணை மேற்கொண்ட நீதிபதி வி.ராம சுப்பிரமணியன், சித்ரவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டார். நீதிபதியின் அறையில் நடந்த இந்த விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன் ஆஜராகி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து அந்தப் பெண்ணை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

"சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். காவல் துறையைச் சேர்ந்த வேறு யாரும் அந்தப் பெண்ணை எதற்காகவும் சந்திக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டும் காலை, மாலை இரு வேளைகளில் தலா ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசலாம்.

இந்த வழக்கு இம்மாதம் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய அறிக்கையை டாக்டர்கள் குழுவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ஏழையின் கண்ணீர்…

உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள பெண் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாங்கள் ஏழைகள். கூலித் தொழிலாளர்கள். இந்த வழக்கின் விசாரணைக்காக சென்னை வரக் கூட பணம் இல்லாமல் வீட்டில் இருந்த பசு மாடுகளை விற்றுவிட்டு வந்திருக்கிறோம்.

சென்னையில் எங்களுக்கென உறவினர்கள் யாரும் இல்லை. சென்னையில் நாங்கள் தங்குவதற்கோ, உணவு உண்பதற்கோ செலவு செய்ய எந்த வசதியும் இல்லை. இந்நிலையில் அப்பாவியான எனது தாயாரை கொலை வழக்கில் சேர்த்துள்ள போலீஸார், இப்போது அவரால் நடக்கக் கூட முடியாத அளவுக்கு மிகக் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர்" எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்த அவரது உறவினர்களும் கதறி அழுதனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்தக் காட்சிகள் பெரும் உருக்கமாக இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x