

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் ஆகவே வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் இந்தியா முதன்மையாக இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டைக்கு சொகுசுக் கார் ஒன்றின் விளம்பரத்திற்காக வந்த சச்சின் டெண்டுல்கர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கூறியதாவது:
"நான் இந்த இந்திய அணியில் உள்ள வீரர்களை நன்றாக அறிவேன். அவர்கள் திறமை என்ன என்பது எனக்குத் தெரியும், டெஸ்ட் போட்டிகளில் இந்த அணி நிச்சயம் மீண்டும் எழுச்சியுறும். நான் விஷயங்களை தன்னம்பிக்கையான மனோநிலையில் அணுகுபவன்.
ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி எப்படி ஆடுகிறது என்று பாருங்கள், போராடும் குணத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் இந்தியாவுக்கு பலமான இடம் உள்ளது. இந்த அணியில் சமச்சீரான தன்மை உள்ளது வீழ்த்துவது கடினம்.
இது பலதிறமை கொண்ட இந்திய ஒருநாள் அணியாகும். பேட்டிங்கில் ஆழம் உள்ளது. பந்து வீச்சிலும் பல்வகைத் தன்மை உள்ளது. பீல்டிங் அபாரமாக இருக்கிறது.
பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் வலது கை இடது கை என்ற சேர்க்கை சரியான விகிதத்தில் உள்ளது, வலது கை, இடது கை பேட்ஸ்மென்கள் கிரீசில் இருக்கும் போது பந்து வீசுவது கடினம், அவர்கள் சரியான திசையைக் கண்டுபிடிக்க வேண்டும்”
இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்