Last Updated : 17 Jun, 2017 10:08 AM

 

Published : 17 Jun 2017 10:08 AM
Last Updated : 17 Jun 2017 10:08 AM

ஆடுகளத்தில் எந்த இடத்தில் பந்து வீசவேண்டும் என்பதை தோனி கண்களால் தெரிந்து கொள்ளலாம்: மனம் திறக்கும் கேதார் ஜாதவ்

ஆடுகளத்தில் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்பதை தோனி கண்களாலேயே பேசுவார் என இந்திய அணியின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரரை வெற்றியை தேடிக் கொடுக்கும் பண்பாளராக மாற்றும் திறன் மகேந்திர சிங் தோனிக்கு உண்டு. அவர் கேப்டனாக இருந்த காலக்கட்டங்களில் ரவீந்திர ஜடேஜாவை மிகச்சிறப்பாக பயன்படுத்தினார்.

தற்போது தோனி, கேப்டனாக பணியாற்றும் விராட் கோலிக்கு பெருமளவில் உதவி செய்து வருகிறார். அந்த வகையில் ஆட்டத் தில் திருப்புனையை ஏற்படுத்தும் வீரராக கேதார் ஜாதவை உருவாக்கி உள்ளார் தோனி.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் இதை கண்கூடாக காண முடிந்தது. 3-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலையில் வைத்திருந்த தமிம் இக்பால் (70), முஸ்பிஹூர் ரகிம் (61) ஆகியோரது விக்கெட்களை கேதார் ஜாதவ் கைப்பற்றி ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கினார்.

இதன் பின்னர்தான் வங்கதேச அணியின் ரன்குவிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. அஸ்வின் பந்து வீச்சு கைகொடுக்காத நிலையில் 6 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய கேதார் ஜாதவ், இந்த ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார்.

கேதார் ஜாதவ் கூறும்போது, “இந்திய அணியில் நான் நுழைந்ததில் இருந்து தோனியுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளேன். அப்போதெல்லாம் அவர் பெற்ற அனுபவத்தை கூறச் சொல்லி அதில் நான் மூழ்கிவிடுவேன். நான் அவருடன் ஒரு பிணைப்பை பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எந்த இடத்தில் பந்து வீச வேண்டுமென அவர் விரும்பு கிறார் என்பதை அவரது கண்களில் இருந்து தெரிந்து கொள்வேன். அதை அப்படியே முயற்சி செய் வேன். அதற்கு சிறந்த பலனும் கிடைக்கும். எனது பந்து வீச்சு, பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்தே அமைவதாக கருது கிறேன்.

திட்டங்களை சரியாக செயல் படுத்த முயற்சி செய்கிறேன். பேட்ஸ்மேன்களின் மனநிலையை சரியாக யூகித்து எனது திட்டங்களை செயல்படுத்துகிறேன். வலை பயிற்சியின் போதும் நான் பந்துகள் வீசுகிறேன்.

கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது ஆச்சர்யப்படுத்தும் வகையில் தோனி, என்னை பந்து வீச்சில் பயன்படுத்தினார். அதில் இருந்துதான் எனது நம்பிக்கை அதிகரித்தது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தேன். இந்த விக்கெட்கள் அனைத்தும் முழுமையான பேட்ஸ்மேன்களே, பின்கள வீரர்கள் கிடையாது.

பேட்ஸ்மேன்கள் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ள முயற்சிக்கும்போது எனது பந்து வீச்சில் எனக்கு நம்பிக்கை ஏற்படும். ஏனேனில் மாறுபட்ட வேகங்கள் கொண்ட எனது பந்து வீச்சு பேட்ஸ்மேனுக்கு கடினமாகவே இருக்கும்” என்றார்.

என்ன சொல்கிறார் கோலி

விராட் கோலி கூறும்போது, “ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் கேதார் ஜாதவை பந்து வீச அழைத்த முடிவுக்கான மொத்த பாராட்டையும் நான் மட்டுமே ஏற்க விரும்பவில்லை. வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், தோனியும் நானும் ஆலோசித்தே இந்த முடிவை எடுத்தோம்.

இந்த பாராட்டு தோனிக்கு சேர வேண்டியது. கேதார் ஜாதவ் உண்மையாக சிறப்பாக பந்து வீசினார். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர். பேட்ஸ்மேன்கள் எங்கு தடுமாறுவார் என்று அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. எந்த ஒரு பந்து வீச்சாளருக்கும் இது சாதகமான விஷயமே” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x