

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2-வது நாளில் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் ஆகியவற்றில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. இதுதவிர ஸ்குவாஷில் இரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்தியா.
தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ஜிது ராய், சமரேஷ் ஜங், பிரகாஷ் நஞ்சப்பா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்தப் பிரிவில் தென் கொரிய அணி 1,744 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தியாவும், சீனாவும் 1,743 புள்ளிகளை பெற்றாலும் இலக்கின் மையப் பகுதியில் துல்லியமாக சுட்டதன் அடிப்படையில் சீனாவுக்கு வெள்ளியும், இந்தியாவுக்கு வெண்கலமும் கிடைத்தன.
பாட்மிண்டன்
மகளிர் பாட்மிண்டன் அணி பிரிவு போட்டியின் அரையிறுதியில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறியது இந்தியா.
இந்தப் போட்டியைப் பொறுத்த வரையில் இந்திய தரப்பில் சாய்னா நெவால் மட்டுமே வெற்றி பெற்றார். மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வி கண்டார். பின்னர் நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரதன்யா காட்ரே-சிக்கி ரெட்டி ஜோடியும், மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி..சி.துளசியும் தோல்வி கண்டனர்.
1986-க்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்றுள்ளது இந்தியா. அதேநேரத்தில் இந்திய மகளிர் அணி வென்ற முதல் பதக்கம் இதுதான். இதற்கு முன்பு இந்திய ஆடவர் அணி 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
தீபிகா, கோஷல் அசத்தல்
ஸ்குவாஷ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல், சவுரவ் கோஷல் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இரு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் இருப்பவரும் ஆசிய தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான சவுரவ் கோஷல் நேற்று நடைபெற்ற காலிறுதியில் 11-6, 9-11, 11-2, 11-9 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் நஷிர் இக்பாலை தோற்கடித்தார். இன்று நடைபெறும் அரையிறுதியில் 2006-ம் ஆண்டின் சாம்பியனான மலேசியாவின் ஆங் பெங் ஹீயை சந்திக்கிறார் கோஷல்.
தீபிகா பலிக்கல் தனது காலிறுதியில் 7-11, 11-9, 11-8, 15-17, 11-9 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஜோஷ்னா சின்னப்பாவை வீழ்த்தினார். இதன்மூலம் ஆசிய விளையாட்டில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் தீபிகா.
அவர் தனது அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான மலேசியாவின் நிகோல் டேவிட்டை சந்திக்கிறார். 1998-ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்ட பிறகு ஒற்றையர் பிரிவில் நிகோல் ஒருமுறை கூட தோற்றதில்லை.
ஹாக்கியில் வெற்றி
ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை தோற் கடித்து வெற்றியுடன் போட்டியை தொடங்கியுள்ளது. இந்தியத் தரப்பில் ரூபிந்தர்பால் சிங் ஹாட்ரிக் கோலடித்தார். ரமண்தீப் சிங் இரு கோல்களையும், டேனிஸ் முஜ்தபா, சிங்ளென்சனா சிங், ரகுநாத் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
ஆடவர் துடுப்பு படகுப் போட்டியில் பஜ்ரங் லாத் தக்கார், ராபின் உலகண்ணன், ரஞ்ஜித் சிங், சவன் குமார், முகமது ஆசாத், மணீந்தர் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தோல்வி முகம்
ஆடவர் டிராப் அணி பிரிவு துப்பாக்கி சுடுதலில் மன்ஷெர் சிங், மானவ்ஜித் சிங், கியான் செனாய் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 6-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அடைந்தது. மான்ஷெர் 117 புள்ளிகளையும், மானவ்ஜித் 116 புள்ளிகளையும், செனாய் 108 புள்ளிகளையும் மட்டுமே பெற்றனர்.
கூடைப் பந்து போட்டியில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் 67-73 என்ற புள்ளிகள் கணக்கில் சவுதி அரேபியாவிடம் தோல்வி கண்டது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் கஜகஸ்தானை சந்திக்கிறது இந்தியா.
மகளிர் சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின் டீப்ரோ, மோஹன் மஹிதா ஆகியோர் முறையே 9 மற்றும் 11-வது இடங்களைப் பிடித்து ஏமாற்றமடைந்தனர். ஹேண்ட்பால் போட்டியில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 19-39 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி கண்டது.
நீச்சல் போட்டியில் நேற்று இந்தியர்கள் பங்கேற்ற 3 பிரிவு களிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவர்கூட இறுதிச் சுற்றுக்கு முன்னேற வில்லை. ஆடவர் 200 மீ. ப்ரீஸ்டைல் தகுதிச்சுற்றில் சவுரப் சங்வேகர் 5-வது இடத்தையே பிடித்தார். ஆடவர் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் தகுதிச்சுற்றில் மது நாயர் 7-வது இடத்தையும், ஆடவர் 200 மீ. பட்டர்ஃபிளை தகுதிச்சுற்றில் ஆக்னல் டிசவுசா 4-வது இடத்தையும் பிடித்தனர். மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய அணி 0-10 என்ற கோல் கணக்கில் தாய்லாந்திடம் படுதோல்வி கண்டது.
ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய மாணவன்
ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தென் கொரியாவைச் சேர்ந்த பள்ளி மாணவரான கிம் சியோங் யாங் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
17 வயதான கிம் சியோங், சகநாட்டவரான ஜிங் ஜாங்கை பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். ஜிங் ஜாங் சாதாரண வீரர் அல்ல. அவர் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் ஆவார். கிம் சியோங் 201.2 புள்ளிகளை பெற்றார். சீனாவின் பாங் வெய் 199.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஜிங் ஜாங் 179.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பளுதூக்குதலில் தைவான் உலக சாதனை
மகளிர் 53 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் தைவான் வீராங்கனை சியூ ஷூ சின் 233 கிலோ எடையைத் தூக்கி புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவின் லீ பிங் 230 கிலோ எடையைத் தூக்கியதே உலக சாதனையாக இருந்தது. நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் கஜகஸ்தானின் ஜல்ஃபியா சின்ஸ்ஹன்லோ 132 கிலோ எடையைத் தூக்கி தனது பழைய சாதனையை (131 கிலோ) முறியடித்தார்.
இதையடுத்து சின் தனது வாய்ப்பில் 132 கிலோ எடையைத் தூக்கி ஜல்ஃபியாவின் சாதனையை சமன் செய்தார். ஆனால் விடாப்பிடியாக போராடிய ஜல்ஃபியா தனது கடைசி வாய்ப்பில் கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 137 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
எனினும் ஒட்டுமொத்த பிரிவில் அவரால் 228 கிலோ எடையை மட்டுமே தூக்க முடிந்தது. அதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. சியூ ஷூ சின்னுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. சீனாவின் ஜங் வான்கியாங் வெண்கலப் பதக்கம் வென்றார். 20 வயதான அவர் ஸ்னாட்ச் பிரிவில் 102 கிலோ எடையைத் தூக்கி ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனை படைத்தார்.