

முதல் பந்திலிருந்தே திரும்பும் பிட்ச் என்ற கொள்கையின்படி புனேயில் ஆஸ்திரேலியாவிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்ட இந்திய அணியின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
வெற்றி குறித்து அவர் கூறியபோது, “4502 நாட்களுக்குப் பிறகு இங்கு வெற்றிபெற்றுள்ளோம். இந்தத் தரவுகள் என்னிடம் கூறப்பட்டன. இந்தப் பிட்சில் டாஸ் வென்ற பிறகு 260 ரன்கள் எடுத்தது அதிர்ஷ்டம்தான். ஸ்டீவ் ஓகீஃப் அபாரமாக வீசினார். இவருக்கு லயன், 2 வேகப்பந்து வீச்சாளர்களும் உதவி புரிந்தனர்” என்றார்.
‘வடிவமைக்கப்பட்ட பிட்ச்’ பற்றி கேட்ட போது, “இந்தப் பிட்ச் இந்திய வீரர்களின் ஆட்டத்திற்கு பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட்டதே. அவர்கள் உருவாக்கியப் பிட்ச் எங்கள் கைகளுக்குள் அகப்பட்டது. பெங்களூருவில் எந்தமாதிரி பிட்ச் காத்திருக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளது.
எனது இரண்டாவது இன்னிங்ஸ் சதம் அதிர்ஷ்டங்கள் நிரம்பியது. இன்னிங்ஸ் முழுதும் அதிர்ஷ்டம் இருந்தது, இந்தியாவில் 2-வது இன்னிங்ஸில் சதம் எடுத்தது மனநிறைவை அளிக்கிறது.
ஆனால் இது ஒர் போட்டிதான். இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. நாங்கள் தொடரை வெல்ல விரும்புகிறோம், ஆனால் அது ஒரு கடினமான பாதை. இந்திய அணி நம்ப முடியாத அளவுக்கு மீண்டெழுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
இலங்கையில் வெற்றி பெறும் தருணங்களிலெல்லாம் அவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தோம். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை அவ்வாறு எழும்ப விடாமல் ஆடினோம்.
இவ்வாறு கூறினார் ஸ்மித்.