Last Updated : 28 Jun, 2019 05:07 PM

 

Published : 28 Jun 2019 05:07 PM
Last Updated : 28 Jun 2019 05:07 PM

மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு கெயில் வரக்கூடாது: கர்ட்லி ஆம்புரோஸ் எதிர்ப்பு

டெஸ்ட் போட்டியில் 5 ஆண்டுகளாக கெயில் விளையாடாமல்  மீண்டும் டெஸ்ட் போட்டியில் ஆட விருப்பம் தெரிவித்திருப்பது இளைஞர்களுக்கு தவறான செய்தியை தெரிவிப்பதாகும் என்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆம்புரோஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் 2017ம் ஆண்டு மீண்டும் சர்வேதேச போட்டிக்கு  திரும்பினார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 215 ரன்கள் சேர்த்தார் கெயில். அதன்பின் கிரிக்கெட்டில் இருந்து கெயில் ஒதுங்கியநிலையில் மீண்டும் ஆடவந்தார்.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று அறிவித்த கெயில், கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் விளையாட விருப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஓய்வு அறிவிப்பில் இருந்து பல்டி அடித்துள்ள கெயில் குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆம்புரோஸ்  பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

கிறிஸ் கெயில் ஒருநாள் தொடர் அல்லது டி20 விளையாட விருப்பமாக இருந்தால், பிரச்சினை ஒன்றும் இல்லை விளையாடட்டும். ஆனால், டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பக் கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக கெயில் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.அப்படி இருக்கும் போது ஒருபோட்டியில் மட்டும் விளையாடுகிறேன் என்று மீண்டும் முடிவை மாற்றி இருப்பது சரியானது அல்ல.

கெயில் இவ்வாறு முடிவை மாற்றிக்கொண்டிருந்தால், இளம் வீரர்களுக்கு என்ன மாதிரியான அறிவுரையை கூற விரும்புகிறார். ஒருநாள், டி20 போட்டியில் கெயில் அதிரடி வீரர்தான், டெஸ்ட் போட்டிக்குஏற்றவாறு கெயிலுக்கு விளையாடத் தெரியாது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை அவசியம், கெயிலுக்கு அந்த பொறுமை இல்லை. இரண்டாவது விஷயம் கிரிக்கெட் குறித்து அதிகம் யோசிக்காமல் இருப்பவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் தேவையில்லை.

இளைஞர்கள் கிரிக்கெட்டை விரும்பி வருகிறார்கள். நிகோலஸ் பூரன், ஹெட்மயர் போன்றோர் சூழலுக்கு தகுந்தவாறு ஆட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள். பந்துவீச்சு சரியாக அமைந்தால், அவர்களுக்கு மதிப்பளிக்கிறார்கள். துல்லியமான பந்துவீச்சாக இருந்தால் நீண்டநேரம் கீரீசில் நாம் நிலைத்திருக்குமாறு ஆடுவது அவசியம்.

இந்திய அணியின் பும்ரா குறித்து குறிப்பிட வேண்டுமானால் வித்தியாசமான திறமை கொண்டவர். நான் பார்த்த வரையில் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் வித்தியாசமானவர். இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்து பும்ரா. சர்வதேச போட்டிகளுக்கு மிகவும்புதியவர் என்பதால், கபில்தேவ், ஸ்ரீநாத் ஆகியோருடன் ஒப்பிடுவது சரியாகாது.

இவ்வாறு ஆம்புரோஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x