Published : 28 Jun 2019 07:25 am

Updated : 28 Jun 2019 09:47 am

 

Published : 28 Jun 2019 07:25 AM
Last Updated : 28 Jun 2019 09:47 AM

ஷமி, பும்ரா மிரட்டல் பந்துவீச்சு: இந்திய அணி அபார வெற்றி: 23 ஆண்டு போராட்டம், தோல்வியால் வெளியேறியது மே.இ.தீவுகள்

23

முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சால் மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

இந்திய அணியின் கட்டுக்கோப்பான, லைன்அன்ட் லென்த் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் இதைக் கூற முடியும். சர்வதேச அளவில் மிரட்டிவரும் பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள அனுபவமற்ற மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்களால் முடியாமல் பணிந்துவிட்டனர்.


முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது. 269 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து 125 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் தோல்வியைச் சந்திக்காத ஒரே அணி எனும் பெருமையை இந்திய அணி பெறுகிறது. 6 போட்டிகளில் 5 வெற்றிகள், ஒரு போட்டி மழையால் ரத்து என 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய அரையிறுதி்க்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டது.

அதேசமயம், மே.இ.தீவுகள் அணி 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 5 தோல்விகள், ஒரு வெற்றி என 3 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணி அதிகாரபூர்வமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிய 3-வது அணியாக மாறியது. ஏற்கனவே தென் ஆப்பிரி்க்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில் இப்போது ஹோல்டர் அணியின் கதையும் முடிந்தது.

கடந்த 1992-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியை உலகக்கோப்பைப் போட்டியில் வெல்ல முடியவில்லை எனும் வரலாறு இந்தியாவின் பக்கம் தொடர்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை இந்த வெற்றிக்கு உரித்தானவர்கள் முகமது ஷமி, பும்ரா இருவரும்தான. சாஹல், ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை எடுத்தாலும் தொடக்கத்தில் மே.இ.தீவுகள் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தது இருவரும்தான் என்பதில் மாற்றமில்லை.

அதிலும் கெயிலுக்கு 2-வது ஓவரில் பும்ரா வீசிய யார்கர் மகாமிரட்டல் 4 பந்துகளை ஆப்-சைடுக்கு வெளியே வீசிவிட்டு 5-வது பந்தை கெயில் கால்களுக்கு இடையே சொருகினார். மிரண்டுபோன கெயில் தடுமாறி கீழே விழமுயன்று சமாளித்தார். இதுபோன்ற இருவரின் பந்துவீச்சில் லைன்-அன்ட் லென்த் கச்சிதமாக கடைபிடிக்கப்பட்டது.

 

இருவரின் பந்துவீச்சை தேவையில்லாமல் தொட்டால் கேட்ச் ஆகிவிடும் என்ற அச்சத்தோடுதான் எதிர்கொண்டனர். அதுபோலவே ஷார்்ட் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு கெயில் ஆட்டமிழந்தார். ஷமியின் மின்னல் வேக துல்லியம், ஹோப்புக்கு ஸ்டெம்பை பதம் பார்த்தது. சிறிதுநேரம் எப்படி பவுல்டு ஆனோம் என்று பார்த்துவிட்டுச் சென்றது சுவாரஸ்யம். அது ஒரு ஓவர் பிட்ச் இன்ஸ்விங்கர் கால்கள் நகரவில்லை, டி20 பாண்யில் மட்டை மட்டும் சுழன்றது.

பும்ரா 6 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 9 ரன்கள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா வீசிய 36 பந்துகளில் 28 பந்துகள் டாட்பந்துகள் என்றால் எப்படி மிரட்டியிருப்பார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இதற்கு சற்றும் குறைவில்லாமல் ஷமி 6.2ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏறக்குறைய 38 பந்துகளில் 29 பந்துகள் டாட்பந்துகளை ஷமி வீசியுள்ளார். இருவரின் இந்த அசாதாரணமான பந்துவீச்சுதான் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியபோதெல்லாம் கைகொடுத்து வருகிறது

தொடக்கத்தில் இருவரும் போட்டியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், நடுப்பகுதியில் குல்தீப், சாஹல், ஹர்திக் ஆகிய மூவரும் சேர்ந்து கொடுத்த வித்தியாசமான தாக்குலில் ஒட்டுமொத்த மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்களும் நிலைகுலைந்து வெளியேறினர்.

தமிழக வீரர்கள் விஜய் சங்கரை ஏன் எடுத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவருக்கு பந்துவீச வாய்பு தரவில்லை, பேட்டிங்கிலும் கிடைத்த வாய்ப்பை சங்கர் தவறவிட்டார்.

ஆல்ரவுண்டர்தான் தேவை எனும் பிடிவாதத்தை கைவிட்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தி்ல் கேதார் ஜாதவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த்கை கொண்டுவரலாம். இருவரின் வருகை நிச்சயம் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கை வலுப்படுத்தும். லீக் ஆட்டங்களில் மட்டுமே சோதனை செய்து பார்க்க முடியும், அரையிறுதியில் கடினம்.

இந்திய அணிக்கு இன்னும் 4-வது வரிசையை நிரப்ப சரியான வீரர்கள் கிடைக்காமல் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தடுமாறி வருகிறது. தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தாலும் விக்கெட் கீ்ப்பர் என்பதாலேயே தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்படுகிறார்.

நடுவரிசை வலுவில்லாமல் இருப்பது நேற்றைய பேட்டிங்கில் தெரிந்தது. 20 முதல் 30 ஓவர்களில் இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்த வலுவற்ற நடுவரிசையைத்தான் காட்டுகிறது.

பேட்டிங்கில் வழக்கம் போல் இந்திய அணியின் கேப்டன் கோலி முத்திரை பதித்தார். 72 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பு செய்த கோலிக்கு ஆட்டநாயகன் விருதுவழங்கப்பட்டது.

ராகுல் 48 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார். அவர் களத்தில்நின்றிருக்க முடியும், ஆனால், அவர் தொடர்ந்து தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்து வருகிறார்.

ரோஹித் சர்மாவுக்கு பிடிக்கப்பட்ட கேட்ச் தவறான முடிவா அல்லது சரியான முடிவா என்று நீண்டவிவாதம் ஓடியது. ஆனால், 3-வது நடுவர் அவுட் என்று தீர்ப்பளித்துவிட்டார்.

தோனி தனது மந்தமான பேட்டிங்கை மறக்காமல் தொடக்கத்தில் விளையாடினார். ஆனால் விக்கெட்டை தக்கவைக்கிறேன் என்று அதிகமான டாட்பந்துகளை தின்றுவிட்டு, கடைசிநேரத்தில் சிக்ஸர், பவுண்டரி அடித்து அதை ஈடுகட்டிக்கொண்டார்.

தோனி போன்ற மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் களத்துக்குள் வருவதே எதிரணிக்கு கிலி ஏற்பட வேண்டும், ரன்ரேட் வேகமெடுக்க வேண்டும், ஆனால் இருக்கும் வேகத்தையும், இழுத்துப்பிடித்து நிறுத்துமாறு தோனி பேட் செய்யக்கூடாது.

 

59 பந்துகளில் அரைசதம் அடித்த தோனி 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டார் என்று கூறவில்லை. தோனி ஆடியது சாதாரண இன்னிங்ஸ் மிகப்பெரிய மேட்ச் வின்னர்,அனுபவ வீரர் ஆகியோரிடம் இருந்த இதுபோன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. அதுபோன்ற அசாதாரண ஆட்டங்களை ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட தோனி ஏன் தனது பேட்டிங்கை குறுகிய வட்டத்துக்குள் வைக்கிறார் என்றுதான் கேட்கிறோம். அடுத்துவரும் போட்டிகளில் அசாதாரண தோனியின் அசாதாரண ஆட்டத்தை காணவே அனைவரின் விருப்பம். இப்படி இவர் ஆடுவதை ஏதோ தோனி மட்டுமே இப்படி ஆட முடியும் என்பது போல் விராட் கோலி உட்பட அனைவரும் பேசுவதுதான் ஐயத்தைக் கிளப்புகிறது. இவர் ஆடும் ஆட்டத்தை யார் வேண்டுமானாலும் ஆட முடியும் எனும்போது எதற்காக இவருக்கு மட்டும் இவ்வளவு முட்டு கொடுக்க வேண்டும்? இதுதான் நம் கேள்வி.

269 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணியின் கெயில், அம்பரிஸ் களமிறங்கினர். ஷமி, பும்ரா இருவரும் கெயிலையும், அம்பரிஸையும் தங்களின் பந்துவீச்சால் கட்டிப்போட்டனர்.

பும்ரா, ஷமியின் பந்துவீச்சை கெயிலால் தொடக்கூடமுடியாமல் திடுமாறினார். வேறுவழியின் ஷமியின் ஷாட்பாலை தொட்டு கேதார் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து கெயில் 6 ரன்னில் வெளிேயறினார். அடுத்த சிறுதுநேரத்தில் ஷமியின் துல்லியமான லென்த் பந்தில், ஹோப் போல்டாகி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 16 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு பூரன், அம்பரிஸ் சிறுதுநேரம் விளையாடினர். பந்துவீச்சில் மாற்றம் செய்தபின் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அம்பரிஸ் 31 ரன்களிலும், குல்தீப் சுழலில் பூரன் 28 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் களத்தில் அதிகபட்சமாக 2 ஓவர்கள் கூட நிலைக்கவில்லை.

அடுத்த 53 ரன்களுக்கு 5விக்ெகட்டுகளை இழந்தது மே.இ.தீவுகள் அணி. ஹெட்மயர்(18), ஹோல்டர்(6), பிராத்வெய்ட்(1), ஆலன்(0), காட்ரெல் (10) என வீழ்ந்தனர். தாமஸ் சிறிதநேரம் தாக்குப்பிடித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் அதிகபட்ச ஸ்கோர் 31 ரன்கள்தான், 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்கள். 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்த 125 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தித் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி முதலில்பேட் செய்தது. ரோஹித் சர்மா, ராகுல் மெதுவாகத் தொடங்கினர். ரோஹித் சர்மா 18 ரன்னில் ரோச் வேகத்தில் ஆட்டமிழந்தார்

3-வது விக்கெட்டுக்கு கோலி, ராகுல் ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தார்கள். மே.இ.தீவுகள் பந்தவீச்ைச கோலி அனாசயமாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தார்.

 

 இருவரும் 69 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ராகுல் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விஜய் சங்கர் 14 ரன்னிலும், ஜாதவ் 7 ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த தோனியுடன் சேர்ந்து கோலி 40 ரன்கள் சேர்த்தார். கோலி 55 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடக்கத்தி்ல் தோனியின் மெதுவான ஆட்டத்தால் ரன்ரேட் குறையவே அடித்து ஆடிய வேண்டிய நெருக்கடியில் கோலி பேட் செய்ய 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, தோனி ஜோடி அதிரடியாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். பாண்டியா 5 பவுண்டரிகள் உள்பட 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி டக்அவுட்டில் வெளியேறினார். தோனி 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் ரோச் 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


இந்திய அணி அபார வெற்றிமே.இ.தீவுகள் உலகக்கோப்பை வெளியேற்றம்கிரிக்கெட் இந்தியாஷமி பும்ராதோனிவிராட் கோலிபாண்டியா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author