Last Updated : 28 Jun, 2019 04:41 PM

 

Published : 28 Jun 2019 04:41 PM
Last Updated : 28 Jun 2019 04:41 PM

தோனியுடன் அடித்து ஆடும் ஒருவர் ஆட வேண்டிய தேவையுள்ளது: சவுரவ் கங்குலி

நடப்பு உலகக்கோப்பையில் பேட்டிங்கில் மந்தமாக ஆடிவருவதாக தோனி மீது எழுந்துள்ள விமர்சனங்களை அடுத்து பலரும் கலவையான கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதற்குள் தோனி மீது தன் கருத்து எதையும் கூற விரும்பவில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

 

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 28 ரன்களையும் நேற்று 40 பந்துகளில் 20 ரன்கள் என்று 20க்கும் மேற்பட்ட டாட்பால்களை விட்டு, அடிக்க வேண்டிய பந்துகளையும் பீல்டர் கைக்கு நேராக அடித்து தோனி ரன் குவிப்பை மந்தமாக்கி பிறகு கடைசி ஓவரில் ஒஷேன் தாமஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளை 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து 61 பந்துகளில் ஒரு அரிய அரைசதம் கண்டார். இந் நிலையில் இந்தியப் பந்து வீச்சின் அபாரத்தன்மையினால் இந்தியா அணி வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் கங்குலி கூறியதாவது:

 

இது ஒருமுறை நடக்கிறது, ஆகவே நான் அதை பெரிது படுத்த மாட்டேன். ஆம் தோனி இதே போன்ற சூழ்நிலையில் கடந்த காலத்திலும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஆடிய போதும் ஸ்பின்னுக்கு எதிராக திணறினார்.

 

தோனியுடன் யாராவது ஒருவர் நின்று அடித்து ஆட வேண்டிய தேவையிருக்கிறது. 3ம் நிலையில் இறங்கும் விராட் கோலியுடனும் 4ம் நிலையில் ராகுலுடனும் ஆட வேண்டும், 5ம் நிலையில் இவர் இறங்குகிறார் ஹர்திக் பாண்டியாவுடன் ஆடும் போது தோனிக்கு பேட்டிங் எளிதாகிறது, ஏனெனில் ஹர்திக் பாண்டியா அடித்து ஆடி ரன் சேர்ப்பார். இவர் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வார்.

 

எனவே தோனி எந்த அளவுக்கு நன்றாக ஆடுகிறார் என்பது பற்றி நான் கருத்துக் கூறுவதற்கு முன்பு நிதானிக்கிறேன். குறிப்பாக அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேச காத்திருக்கிறேன். அவரால் பவுண்டரிகள் அடிக்க முடிகிறது, வித்தியாசமாக ஆட முடிகிறது.

 

எனவே இந்த உலகக்கோப்பையில் தோனியின் ஆட்டம் பற்றி நாம் அவசரமாக எதுவும் கணிக்க வேண்டாம். அவரது அனுபவம் அவருக்குக் கைகொடுக்கும் அவர் நிச்சயம் வெற்றியடைவார்.

 

என்றார் கங்குலி. அதாவது தங்கள் கரியரை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இளம் வீரர்கள் ரிஸ்க் எடுத்து அவுட் ஆனாலும் பரவாயில்லை என்று ஆட வேண்டும் தோனி மட்டும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து பாதுகாப்பாக ஆடிக்கொள்வார் என்ற தொனியில் கங்குலி மட்டுமல்ல பலருமே கூறிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x