Last Updated : 10 Sep, 2018 02:52 PM

 

Published : 10 Sep 2018 02:52 PM
Last Updated : 10 Sep 2018 02:52 PM

2 நிமிடம் தான் திராவிட்டிடம் பேசினேன்; என் பயம் போய்விட்டது: ஹனுமா விஹாரி உருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முன் பதற்றத்துடன் இருந்தேன், ஆனால், ராகுல் திராவிட்டிடம் 2 நிமிடங்கள் பேசியவுடன் என் பதற்றம், பயம் போய்விட்டது என்று இந்திய வீரர் ஹனுமா விஹாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுவிட்டது. ஒருமுறைக்காக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார்.

முதல் போட்டியிலேயே அசத்தலாக பேட் செய்த விஹாரி 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரவிந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணியின் ஸ்கோர் 292 உயர முக்கியக் காரணமாக அமைந்தார்.

ஹனுமா விஹாரி தனது முதல் சர்வதேச போட்டி அனுபவம் குறித்து கூறியுள்ளதாவது:

''என்னுடைய முதல் சர்வதேசப் போட்டி இது என்பதால், எனக்கு மிகவும் பதற்றமாகத்தான் இருந்து. போட்டி தொடங்குவதற்கு முதல்நாள் நான் ராகுல் திராவிட்டை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். 2 நிமிடங்கள்தான் பேசி இருப்பேன், எனக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசி, ஊக்கமளித்தார். எனது தேவையில்லாத பதற்றத்தை நீக்கினார். உண்மையில் ராகுல் திராவிட் ஒரு லெஜெண்ட். அவர் எனக்கு பேட்டிங்கில் ஏராளமான நுணுக்கங்களைக் கூறினார்.

உனக்குத் திறமை இருக்கிறது, பொறுமையாகக் களத்தில் நின்று விளையாடு, உன்னுடைய பேட்டிங்கை ரசித்து விளையாடு என்று ராகுல் திராவிட் எனக்கு நம்பிக்கையூட்டினார். என்னுடைய பேட்டிங் இந்த அளவுக்குச் சிறப்பாக அமைந்தமைக்கு திராவிட்தான் காரணம். இந்தியா ஏ அணியில் நான் இடம் பெற்றிருந்த போது, எனக்கு திராவிட் ஏராளமான உதவிகளையும், பேட்டிங் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்து, என்னை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியிருக்கிறார்.

தலைசிறந்த பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஸ்டோக்ஸ், பிராட் ஆகியோரைப் பார்க்கும் போது எனக்குப் பதற்றமாகவும், நெருக்கடியாகவும் இருந்தது. ஆனால், திராவிட்டின் அறிவுரைகளைக் கேட்டபின் எனக்கு அவர்களின் பந்துவீச்சு பொருட்டாகத் தெரியவில்லை.

பிராட், ஆன்டர்ஸன் உலகளவில் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள். அவர்களின் பந்துகளை எதிர்கொள்ளும் போது, எனக்குள் நேர்மறையான எண்ணங்களை வைத்துக்கொண்டேன். அதனால் அவர்களின் பந்துவீச்சை எளிதாக அணுக முடிந்தது''.

இவ்வாறு விஹாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x