பேட்ஸ்மென்களை பவுல்டு செய்வதை குறிக்கோளாகக் கொண்ட முரளிதரன்: பிரசன்னா அலசல்

பேட்ஸ்மென்களை பவுல்டு செய்வதை குறிக்கோளாகக் கொண்ட முரளிதரன்: பிரசன்னா அலசல்
Updated on
1 min read

அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கான உலக சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன் பந்து வீச்சு பற்றி இந்திய முன்னாள் ஸ்பின் பவுலர் ஈராப்பள்ளி பிரசன்னா தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தின் தொடர் ஒன்றில் அவர் முரளிதரன் பந்து வீச்சு பற்றி கூறியதாவது:

மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஸ்பின் பவுலர் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரனே. இவரது பந்து வீச்சை விவரிப்பது அவ்வளவு சுலபமல்ல.

முரளிதரன் ஒரு வினோதமான பவுலர். இவரது பந்து வீச்சு முறை குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஸ்பின் உலகின் தலை சிறந்த பவுலர் அவர். இவரது பந்துகள் பல முறையற்றவை என்று கருதப்பட்டது. ஆனால் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்து வீச்சின் அனுகூலங்களை மட்டும் நான் கூற விரும்புகிறேன்.

அவரது பந்து வீச்சு முறை முற்றிலும் வேறுபட்டது. முழுதும் மணிக்கட்டைப் பயன்படுத்தும் ஒரு பந்து வீச்சு. அவர் பற்றி கூறும்போது அவர் பந்துகளை பயங்கரமாகத் திருப்பக் கூடியவர் என்பதே பிரதானமாக இருந்து வருகிறது.

மேலும் அவர் பல்வேறு விதமான பந்து வீச்சுகளை வைத்துள்ளார் (தூஸ்ரா, லெக்ஸ்பின்). ஆனால் அது ஒரு திறமைதான் என்றாலும், அவரிடம் நான் காண்பது ஆஃப் ஸ்பின், ஆஃப் பிரேக் வகையிலேயே அவரால் தினுசு தினுசாக வீச முடிகிறது என்பதே. லெந்த், பிளைட், லூப் என்று அவரது கலவை அசத்தக்கூடியது.

எனவே அவர் தூஸ்ரா, லெக்ஸ்பின் என்று மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவரது ஆஃப் பிரேக், ஆஃப் ஸ்பின்னிலேயே அவ்வளவு வகைகள் உள்ளன. மேலும் விக்கெட்டுகள் எடுப்பதே குறிக்கோள் என்பதை அவர் அறிவிக்கும் விதமாக வீசுவதை முதன் முதலில் அறிவித்த பவுலர் என்றே நான் கருதுகிறேன்.

இது எவ்வாறு வெளிப்படுகிறது எனில் பேட்ஸ்மென்களை அவர் பவுல்டு செய்ய அதிகம் விரும்புகிறார் என்பதிலிருந்து தெரிந்தது. பேட்ஸ்மென்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும்போதும், அல்லது அடித்து ஆடும்போதும் ரிஸ்க் அதிகம். இதில்தான் முரளி அவ்வளவு விக்கெட்டுகளைக் குவிக்க முடிந்துள்ளது” என்றார் பிரசன்னா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in