Published : 17 Sep 2018 08:34 AM
Last Updated : 17 Sep 2018 08:34 AM

‘வெத்து’ ஆசியக் கோப்பைப் போட்டியில் ஹாங்காங்கை ஊதியது பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணி எதிர்பார்த்ததை விட மிகச் சுலபமாக ஹங்காங்கை 8 விக்கெட்டுகளில் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியது.

ஹாங்காங் 116 ரன்களில் சுருண்டு, பாகிஸ்தான் 120/2 என்று வெற்றி பெற்றது.

பார்மில் இருக்கும் ஃபகார் ஜமான் விக்கெட்டை அவரது 24 ரன்களிலும் பாபர் ஆஸம் விக்கெட்டை அவரது 33 ரன்களிலும் வீழ்த்தியதைத் தவிர ஹாங்காங்கிற்கு இந்தப் போட்டியில் நினைவில் வைத்துக் கொள்ள எதுவுமில்லை.

ஹாங்காங் 37 ஓவர்களில் மடிய பாகிஸ்தான் 23.4 ஓவர்களிலும் வெற்றிபெற 50 ஓவர் போட்டி 60 ஓவர்களில் முடிந்தது.

இந்தியாவுக்கு முன்னதாக இப்படி ஒரு போட்டியில் பாகிஸ்தான் ஆடியது அந்த அணிக்கு நல்லதல்ல. அதே போல்தான் இந்திய அணிக்கும். ஹாங்காங்குடன் ஆடிவிட்டு பாகிஸ்தானுடன் மோதுவதும் நல்லதல்ல.

திறமை குறைவான ஒரு அணியுடன் ஆடி பிறகு ஒரு ஹை-லெவல் கிரிக்கெட் ஆடுவது சுலபமல்ல.

பாகிஸ்தான் பந்து வீச்சு ஹாங்காங்குக்கு ‘ஸாரி ரொம்ப டூ மச்’ ஆகிப்போனது. உஸ்மான் கான் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பாஹிம் அஷ்ரப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், ஹாங்காங் 116 ரன்களுக்குச் சுருண்டது.

2004 கொழும்பு ஆசியக் கோப்பையில் ஹாங்காங்கை 173 ரன்கள் வித்தியாசத்தில் ஊதியது, 4 ஆண்டுகள் கழித்து கராச்சியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காஙை வீழ்த்தியது பாகிஸ்தான்.

அன்ஷுமன் ராத் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைச் சரியாகத் தேர்வு செய்தார். ஏனெனில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்து அவர்கள் ‘அடிச்சுப் பழகி’ விடக்கூடாது என்பதில் இந்தியாவுக்கு நல்லது செய்துள்ளார் ஹாங்காங் கேப்டன்.

ஐஜாஜ் கான் 27 ரன்களை அதிகபட்சமாக எடுக்க கின்சித் ஷா 26 ரன்களை எடுத்தார். இவர்கள் இருவரும் 6வது விக்கெட்டுக்காக 53 ரன்கள் சேர்க்கவில்லை எனில் ஹாங்காங் ஸ்கோரை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. முன்னதாக 44/5 என்று தடுமாறியது ஹாங்காங். கேப்டன் ராத் (19), நிஜாகத் கான் (13), இருவரும் இரட்டை இலக்கம் எட்டினர்.

இன்று முக்கியமான போட்டியில் இலங்கை அணி கடினமான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இரண்டு பிரிவுகளிலிருந்தும் 4 அணிகள் சூப்பர் 4 மட்டத்துக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி செப்.28-ல் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x