Published : 18 Sep 2018 07:36 PM
Last Updated : 18 Sep 2018 07:36 PM

‘தம்பி, உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?’- சச்சினிடம் வம்பு; மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்: ருசிகரங்களைப் பகிர்ந்த வாசிம் அக்ரம்

சச்சின் டெண்டுல்கர் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோது, அவரைக் கிண்டல் செய்த விதம், நினைவுகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பகிர்ந்துள்ளார்.

டெல்லியில் இந்தியாடுடே வார இதழ் சார்பில் சலாம் கிரிக்கெட் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், சுனில் கவாஸ்கர், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அப்துல் காதிர், ஹர்பஜன் சிங், முகமது அசாருதீன், ஆர்.அஸ்வின், முத்தையா முரளிதரன், மதன் லால் ஆகியோர் பங்கேற்று தங்களின் அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அப்போதுதங்களிடையே நடந்த சுவையான சம்பவங்களையும் தெரிவித்தனர்.

உலகக் கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இரு மிகப்பெரிய ஆளுமைகளும் பல்வேறு சாதகனைகளுக்கு சொந்தக்காரர்கள். இருவருக்கும் கிரிக்கெட்டில் தனித்தனியே பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், ஒருவரை ஒருவர் சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது.

இது குறித்து வாசிம்அக்ரம் கூறுகையில், கடந்த 1989-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 16 வயதில் கிரிக்கெட் வீரர் ஒருவர் களமிறங்க உள்ளார் என்று கூறினார்கள். அப்போது சச்சின் டெண்டுல்கர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம் ஆனால் பார்த்தது இல்லை.

சச்சின் டெண்டுல்கர் பேட்டை கையில் பிடித்து மைதானத்தில் இறங்கியதும் 16 வயது கிரிக்கெட் வீரர் என்றார்கள், 14 வயது வீரரை அனுப்பி இருக்கிறார்களே என்று வியப்படைந்தேன். நான் உடனே சச்சின் அருகே சென்று, தம்பி, வீட்டில் அம்மாகிட்ட அனுமதி கேட்டுத்தானே கிரிக்கெட் விளையாட வந்தாய் என்று கேட்டேன். அதற்கு சச்சின் பதில் ஏதும் பேசாமல் சென்று விட்டார் என்று கூறி சிரித்தார்.

வாசிம் அக்ரத்துடன் விளையாடியபோது ஏற்பட்ட சுவையான அனுபவங்களை ஹர்பஜன் சிங்கும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை வாசிம் அக்ரம் எனது ஹீரோ அவர் விளையாடுவதைப் பார்த்து ரசித்துவிட்டு கிரிக்கெட் விளையாட வந்தேன்.

என்னுடைய 4-வது டெஸ்ட் போட்டி என்று நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக நான் களமிறங்கினேன். அப்போது, நான் பேட் செய்யும்போது, வாசிம் அக்ரம் பந்துவீசினார். அவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள எனக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பேட் செய்தேன்.

வாசிம் அக்ரம் வீசிய பந்து தெரியாமல் என் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றுவிட்டது. என்னால் அந்தக் காட்சியை நம்ப முடியவில்லை. நான் பவுண்டரி அடித்ததைப் பார்த்து வாசிம் பாய் என்னை முறைத்துப் பார்த்தார். நான் அருகே சென்று, மன்னித்துக்கொள்ளுங்கள் சார், தெரியாமல் அடித்துவிட்டேன் என்றேன் அவர் சிரித்துக்கொண்டே சென்றார் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x