Published : 01 Sep 2018 08:06 PM
Last Updated : 01 Sep 2018 08:06 PM

டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணி வரை: ஜாகீர் கான் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட கலீல் அகமட்

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இடது வேகப்பந்து வீச்சாளர்  கலீல் அகமட் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இதுவரை ஒரேயொரு முழு சீசன் தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியுள்ளார். இரண்டேயிரண்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில்தான் ஆடியுள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2018 ஐபிஎல் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.

இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்து தொடரிலும் சமீபத்தில் முடிந்த நான்கு அணிகள் கொண்ட தொடரிலும் ஆடியுள்ளார். இந்தியா ஏ அணிக்காக இவர் ஆடிய 9 போட்டிகளில் ஒரு போட்டி கூட விக்கெட் வீழ்த்தாமல் இல்லை.

இவரது உயரத்தினால் இவரால் மட்டையான பிட்சில் கூட கூடுதல் பவுன்ஸ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள டோங்க் என்ற டவுனில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் தன் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

ஜாகீர் கான் மேற்பார்வையில் பந்து வீச்சுக் கற்றுக் கொண்டு வளர்ந்த கலீல் அகமட் தற்போது வேகம், பவுன்ஸ் ஆகியவற்றோடு ஸ்விங்கும் செய்வதால் ஒரு முழு பவுலராகத் திகழ்கிறார், ஆகவே தேசிய அணியில் வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதலில் வலது கை மட்டையாளர்களுக்கு பந்தை குறுக்காக வீசுவது மட்டும்தான் செய்து வந்தார், பிறகு படிப்படியாக வலது கை மட்டையாளர்களுக்கு பந்தை உள்ளே கொண்டு வரும் வித்தையையும் கற்றுக் கொண்டுள்ளார்.

2016 மற்றும் 2017 ஐபிஎல் தொடர்களில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் இருந்தார், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, அப்போது ஜாகீர் கான் கேப்டனாக இருந்தார். அப்போது ஜாகீர் கான் ஸ்விங் பவுலிங் வித்தைகளை கலீல் அகமடுடன் பகிர்ந்து கொண்டதோடு, அவர் பந்து வீச்சுக்கு அவரையே கள வியூகம் அமைக்கச் செய்துள்ளார்.

“ஜாகீர் கானுடன் இருந்த நாட்கள் ஒரு பவுலராக என்னை மேம்பாடு அடையச் செய்தது. நான் வெறுமனே வேகமாக வீசுவதில்தான் கவனம் செலுத்தி வந்தேன், உத்திகள், நுட்பங்கள் அவ்வளவாக பரிச்சயம் ஆகவில்லை. ஆனால் ஜாகீர் கான் என் வலது கை, ரிஸ்ட் நிலை ஆகியவற்றிற்கான உத்திகளைக் கற்றுக் கொடுத்தார். நான் பந்தைப் பிடிப்பதில் சில தவறுகள் இருந்தது. ஜாகீர் கான் அவற்றையெல்லாம் மாற்றினார், பந்தை வலது கை பேட்ஸ்மென்களுக்கு உள்ளே ஸ்விங் செய்வதையும் கற்றுக் கொண்டேன்” என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறிஉள்ளார்.

தியோதர் டிராபி ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டியில்  உமேஷ் யாதவ்வுடன் சேர்ந்து ஆவேசமாக வீசினார். கர்நாடகாவின் டாப் 3 வீரர்களை பெவிலியன் அனுப்பியது வெற்றிக்கு வித்திட்டது.

இந்திய வேகப்பந்து வீச்சில் இப்போதைக்கு உள்ள குறைபாடு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாததே, அதனை மனதில் கொண்டுதான் தற்போது கலீல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெகுவிரைவில் அவர் இந்திய அணிக்குள் வர இதுவும் ஒரு காரணம். ஜாகீர் கான், ராகுல் திராவிட் பட்டறையில் தீட்டப்பட்ட இவர் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x