Published : 01 Sep 2018 09:38 AM
Last Updated : 01 Sep 2018 09:38 AM

18-வது ஆசிய விளையாட்டு: பாய்மர படகு போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கம்;  ஹாக்கியில் மகளிர் அணி வெள்ளி வென்றது

ஆசிய விளையாட்டு பாய்மர படகு போட்டி யில் இந்தியா 3 பதக்கங்கள் வென்றது. ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணியி னர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. 13-வது நாளான நேற்று பாய்மர படகு போட்டியில் இந்தியா வுக்கு 3 பதக்கங்கள் கிடைத்தது. மகளிர் பிரிவில் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷெர்வ்கர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 15 சுற்றுகளின் முடிவில் 40 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

மகளிருக்கான ஓபன் லேசர் பிரிவில் இந்தியாவின் ஹர்ஷிதா தோமர் 12 சுற்று களின் முடிவில் 62 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று ஆடவர் பிரிவில் வருண் தக்கார் அசோக், செங்கப்பா கணபதி கேலாபந்தா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 15 சுற்றுகளின் முடிவில் 40 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

ஸ்குவாஷில் அசத்தல்

ஸ்குவாஷில் மகளிருக்கான அணிகள் பிரிவில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனைனா குருவிலா, தன்வி கண்ணா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி அரை இறுதியில் 2-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. 16-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, 8 முறை உலக சாம்பியனான நிக்கோல் டேவிட்டை 12-10, 11-9, 6-11, 10-12, 11-9 என்ற கணக்கில் வீழ்த்தி வியக்க வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தீபிகா பல்லிகல் 11-2, 11-9, 11-7 என்ற நேர் செட்டில் லோ வீ வெர்னை எளிதாக வீழ்த்தினார். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம்இந்திய அணி குறைந்தது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இன்று ஹாங்காங்கை சந்திக்கிறது.

ஸ்குவாஷில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங் சாந்து, ரமித் தாண்டன், மகேஷ் மங்கோன்கர் ஆகியோரை உள்ளடக்கிய இந் திய அணி அரை இறுதியில் 0-2 என்ற கணக் கில் ஹாங்காங்கிடம் தோல்வியடைந்தது.

ஹாக்கியில்

ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டது. இதையடுத்து இந்திய அணி வெள்ளிப் பதக்கத்துடன் திரும்புகிறது.

சரத், மணிகா தோல்வி

டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில்இந்தியாவின் சரத் கமல் 7-11, 11-9, 10-12, 16-14, 9-11 என்ற செட் கணக்கில் தைவானின்சூவாங் சிஹியுவானிடம் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின்சத்யன் 11-9, 4-11, 9-11, 6-11, 10-12 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கென்டா மட்சுதரியாவிடம் வீழ்ந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா 2-11, 8-11, 8-11, 11-6, 4-11 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் மன்யுவிடம் தோல்வி கண்டார்.

விகாஸூக்கு வெண்கலம்

ஆடவருக்கான 75 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் அரை இறுதிக்கு முன்னேறி யிருந்தார். அரை இறுதியில் அவர், கஜகஸ் தானின் அமன்குல் அபில்கானை எதிர்கொள் வதாக இருந்தது.ஆனால் மருத்துவ ரீதியாக விகாஸ் கிருஷ்ணன் போட்டியில் பங்கேற்க தகுதியில்லை என அறிவிக்கப்பட்டார். இதனால் விகாஸ் கிருஷ்ணன் வெண்கலப் பதக்கம் பெறுகிறார்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஸ் கிருஷ்ணன் காயம் அடைந்திருந்தார். இந்த காயமானது கால் இறுதி போட்டியின் போது அதிகரித்தது. இதன் காரணமாக அரை இறுதியில் விகாஸ் கிருஷ்ணன் விளையாடு வதற்கான உடல் தகுதியை பெறமுடியாமல் போனது.

இதுதொடர்பாக இந்திய அணியின் அதி காரி ஒருவர் கூறுகையில், விகாஸ் கிருஷ்ண னின் கண் பகுதியில் உள்ள ரெட்டினாவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த காயத்து டன் அவரை போட்டியில் பங்கேற்க அனுமதித்தால் அது மிகவும் ஆபத்தாகிவிடும். அவர், ஒரு சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்” என்றார்.

வெண்கலப் பதக்கம் பெறும் விகாஸ் கிருஷ்ணன் ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச் சண்டை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆடவருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் அரை இறுதியில் 3-2 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸின் பலாம் கர்லோவை வீழ்த்தினார். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அமித் வெள்ளிப் பதக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

சாஃப்ட் டென்னிஸ்

சாஃப்ட் டென்னிஸில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில் கம்போடியாவிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் மகளிருக்கான அணிகள் பிரிவில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தியது.

ஜூடோ

ஜூடோவில் மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவு கால் இறுதியில் இந்தியா வின் ரஜ்விந்தர் கவுர் 1-10 என்ற கணக்கில் ஜப்பானின் அகிரா சோனேவிடம் வீழ்ந்தார். ஆடவருக்கான 100 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அவ்தார் சிங் 1-10 என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இவான் ரெமெரங்கோவிடம் தோல்வியடைந்தார்.

வாலிபாலில் தோல்வி

மகளிருக்கான வாலிபாலில் 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 25-21, 25-16, 25-15 என்ற செட் கணக்கில் சீன தைபேவிடம் தோல்வியடைந்தது. லீக் சுற்றில் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட இந்திய அணி 10-வது இடத்துடன் தொடரை நிறைவுசெய்துள்ளது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 13 தங்கம், 22 வெள்ளி, 29 வெண்கலங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x