Published : 09 Sep 2018 07:51 PM
Last Updated : 09 Sep 2018 07:51 PM

ஜடேஜா அபார 86 நாட் அவுட்; ஹனுமா விஹாரி அறிமுக அரைசதம்: இந்தியா 292 ரன்களுக்கு ஆல் அவுட்

ஓவல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்று தொடங்கிய இந்திய அணி ஜடேஜா, விஹாரியின் அபாரமான அரைசதங்களையடுத்து முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்தின் முன்னிலையை 40 ரன்களாகக் குறைத்தனர்.

மொயின் அலி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா ஒரு சிங்கிள் எடுத்து அடுத்த ஓவரின் ஸ்ட்ரைக்கைத் தக்க வைக்கலாம் என்று முயற்சி செய்தார், ஆனால் பும்ராவினால் ரீச் செய்ய முடியவில்லை, பிராட் த்ரோவை பேர்ஸ்டோ சுலபமாக பிடித்து ரன் அவுட் செய்தார். பும்ரா ரன்னே எடுக்காவிட்டாலும் ஜடேஜா 32 ரன்கள் சேர்க்க உறுதுணையாக 14 பந்துகள் நின்றார்.

ரவீந்திர ஜடேஜா 156 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 86 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார், சதம் எடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது, ஆனால் பும்ரா ரன் அவுட்டினால் அது பறிபோனது.

இந்த டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளையும் 86 முக்கிய ரன்களையும் எடுத்து ஹர்திக் பாண்டியாவின் இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளார் ஜடேஜா.

முன்னதாக ஹனுமா விஹாரியும், ஜடேஜாவும் இணைந்து பல நெருக்கடியான பந்துவீச்சில் ஆட்டமிழக்காமல் எப்படியோ அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து 7வது விக்கெட்டுக்காக 77 ரன்களைச் சேர்த்து இந்திய அணியின் ரன் இடைவெளியைக் குறைத்தனர்.

ஹனுமா விஹாரி சில அருமையான கவர் ட்ரைவ், ஸ்கொயர் ட்ரைவ், பந்தைக் குத்தினால் தைரியமாக ஹூக் என்று 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அறிமுக டெஸ்ட்டில் அரைசதம் கண்டார். 56 ரன்களில் அவர் மொயின் அலி பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், ரிவியூ பயனளிக்கவில்லை. இஷாந்த் சர்மா 4 ரன்னில் அலியிடம் வெளியேற மொகமது ஷமி ரஷீத்திடம் 1 ரன்னில் காலியானார்.

 

ரவீந்திர ஜடேஜா மிக அருமையாக ஆடினார் ஜேம்ஸ் ஆண்டர்சனை அடித்த பிரமாதமான கட் ஷாட் மிக அருமை, கடைசியில் பிராட் ஷார்ட் பிட்ச் குத்திய ஜோருக்கு திரும்பிக் கொண்டு ஃபைன் லெக்கில் அடித்த பவுண்டரியும் அவரது மூடைக் காட்டியது. அவர் 86 நாட் அவுட். இந்திய அணி 292 ரன்களுக்கு முடிந்தது.

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், அலி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இங்கிலாந்து தற்போது 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது. குக் தனது கடைசி இன்னிங்ஸில் ஆடி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x