Published : 16 Sep 2018 10:54 AM
Last Updated : 16 Sep 2018 10:54 AM

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது மொயின் அலியை ஒசாமா என திட்டிய ஆஸ்திரேலிய வீரர்: ஆஸி. வாரியம் விசாரணை

ஆஸ்திரேலிய வீரர் இனப்பாகுபாடுடன் நடந்து கொண்டதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி சுயசரிதை புத்தகம் எழுதி வருகிறார். இதில் ஒரு சில தகவல்கள் தி டைம்ஸ் நாளிதழில் வெளியாகி வருகின்றன. அதில், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா பின்லேடன் என அழைத்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக மொயின் அலி தனது சுயசரிதையில் விரிவாக கூறியிருப்பதாவது:

எனது தனிப்பட்ட திறனில் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிறப்பாக அமைந்தது. எனினும் இந்த டெஸ்ட்டில் என்னை திசை திருப்பிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படி கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு அதிகம் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோதும் நான் கோபமாக இருந்தது இல்லை. அணி வீரர்களிடம் இது குறித்து கூறினேன். இந்த விவகாரத்தை பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லேமனிடம் எடுத்துச் சென்றார்.

அவர், சம்பந்தப்பட்ட வீரரிடம், மொயின் அலியை ஒசாமா என அழைத்தாயா? என்று கேட்டார். ஆனால் அந்த வீரர் தான் கூறியதை மறுத்ததுடன் பகுதி நேரப் பந்து வீச்சாளர் என்றுதான் கூறினேன் எனவும் பதில் அளித்தார். எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும். எனினும் அந்தப் போட்டியில் நான் கோபமாகவே இருந்தேன். தொடரை நாங்கள் 3-2 என வென்ற பிறகும் அந்த வீரரிடம் இது குறித்துக் கேட்டேன். அப்போதும் அதை மறுத்த அவர், தனது சிறந்த நண்பர்களில் சிலர் முஸ்லிம்கள்தான் என்றும் கூறினார்.

இவ்வாறு மொயின் அலி தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

மொயின் அலி கூறிய சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ளது. முதல் முறையாக ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மொயின் அலி, கார்டிப் நகரில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 77 ரன்கள் சேர்த்ததுடன் 5 விக்கெட்களையும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொயின் அலி தனது சுயசரிதையில், தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தின் போது ஆஸ்திரேலிய அணி மீது பரிதாபம் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் தடை செய்யப்பட்ட வார்னர், ஸ்மித், பேங்கிராப்ட் ஆகியோர் மிகவும் அராஜகமானவர்கள் என்றும் எழுதியுள்ளார்.

இதற்கிடையே மொயின் அலி தான் சந்தித்த இனப்பாகுபாடு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “இயற்கைக்கு மாறான இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் விளையாட்டிலோ அல்லது சமூகத்திலோ இதற்கு இடம் இல்லை. எங்களுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு தெளிவான தொகுப்பு மற்றும் நடத்தைகள் உள்ளன. இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். சம்பவத்தின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளோம்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x