Published : 20 Sep 2018 06:17 PM
Last Updated : 20 Sep 2018 06:17 PM

‘தோனியைப் பார்க்க 10 வருஷம் காத்திருந்தேன்’: ஹாங்காங் அணியினரை தேடிச் சென்று சந்தித்த இந்திய அணியினர்

ஆசியக் கோப்பைப் போட்டியில் ஹாங்காங் அணியை தனது முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, போட்டி முடிந்த பின் அவர்களின் அறைக்குச் சென்று சந்தித்து தங்களின் நட்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்த்து ஆடியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது. ஆனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேட் செய்த ஹாங்காங் அணி 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்து 26 ரன்களில் தோல்வி அடைந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் அன்சுமன் ராத், நிசாகத் கான் ஆகியோர் 170 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்குக் கிலி ஏற்படுத்தினார்கள். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஹாங்காங் அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டி முடிந்த பின், தங்களின் நட்பையும், பாராட்டையும் தெரிவிக்கும் வகையில், இந்திய அணியினர் ஹாங்காங் அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்குச் சென்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தோனி, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவண், தினேஷ் கார்த்திக். குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சென்று ஹாங்காங் அணி வீரர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது ஹாங்காங் வீரர்கள் சிறப்பாக பேட் செய்ததற்கும், பந்து வீசியதற்கும் பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். தங்களின் அனுபவங்களை பாபர் கான், இஷான் கான், கின்சிட் ஷா ஆகியோரிடம் இந்திய வீரர்கள் பகிர்ந்து கொண்டு புகைப்படங்களையும் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர்.

ஹாங்காங் அணி வீரர் இஷான் கான் ரோஹித் சர்மா விக்கெட்டையும், தோனி விக்கெட்டையும் வீழ்த்தியவர். சுழற்பந்துவீச்சாளரான இஷான் கான், ரோஹித் சர்மாவுடனும், தோனியுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக இஷான் கான் கூறுகையில், ''தோனியைச் சந்திக்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பது என்னுடைய 10 ஆண்டு கனவு.  அது இப்போது நிறைவேறிவிட்டது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்திய வீரர் புவனேஷ் குமார், பந்துகளை எவ்வாறு ஸ்விங் செய்ய வேண்டும் என்பது குறித்து ஹாங்காங் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x