

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மாதான் தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லஷ்மண் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி சதம் எடுத்த ரஹானே. தொடக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அவரை நடுவரிசையில்தான் களமிறக்க வேண்டும் என்று இ.எஸ்.பி.என். கிரிக் இன்போ பேட்டியில் லஷ்மண் கூறியுள்ளார்.
ரோகித் சர்மா ஏன் தொடக்கத்தில் களமிறக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர் கூறும் காரணம் இதோ:
"ஆஸ்திரேலிய பிட்ச்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதற்கு முன்பு அவர் ஆஸ்திரேலியாவில் அனுபவமற்ற வீரராகக் களமிறங்கிய போதே 2007ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடினார். அவரது பேட்டிங் பாணி ஆஸ்திரேலிய பிட்ச்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஆகவே நான் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவதையே ஆதரிக்கிறேன்.
ரஹானேயை பேக்-அப் ஆக வைத்துக் கொள்ளலாம். இவர் தொடர்ந்து நடுவரிசையில் களமிறங்குவதே சிறந்தது.” என்று கூறினார்.
விராட் கோலியின் பேட்டிங் சரிவு பற்றி கூறிய லஷ்மண், “வெஸ்ட் இண்டீஸுக்கு முன்னதாக அவருக்கு கொஞ்சம் இடைவெளி உள்ளது. சாம்பியன்ஸ் லீகில் அவரது அணி இல்லை. இந்தக் கால அவகாசத்தை இங்கிலாந்தில் அவர் செய்த தவறுகளை சரி செய்து கொள்ள பயன்படுத்திக் கொள்வது நலம். கோலி கடினமாக உழைக்கும் ஒரு இளம் வீரர், அவர் மீண்டும் எழுச்சியுறுவார் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.” என்றார்.