Published : 15 Sep 2018 03:22 PM
Last Updated : 15 Sep 2018 03:22 PM

கோலியா தோனியா? யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்? எண்கள் கூறுவது என்ன?

டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது இந்திய கேப்டன்களிலேயே பெரிய பெயரை அயல்நாட்டினர் மத்தியிலும் எடுத்ததில் மன்சூர் அலிகான் பட்டவ்டிதான் சிறந்த கேப்டன். இரட்டை அயல்நாட்டு தொடர்களை அடுத்தடுத்து வலுவான மே.இ.தீவுகள், இங்கிலாந்து என்று கொடிநாட்டியவர் அஜித் வடேகர்.

இது வெற்றி தோல்விகளினால் அல்லாமல் பட்டவ்டியின் கேப்டன்சி திறமையினால் அவருக்கு கிடைத்த நற்சான்றிதழாகும். அதே போல் சவுரவ் கங்குலி கேப்டனான பிறகு அயல்நாடுகளில் இந்திய வீரர்களின் ஆட்டத்தில் புத்தெழுச்சி ஏற்பட்டது.

எண்களை விடுத்துப் பார்த்தால் கேப்டன்சி திறமைகளில் தோனியும் கோலியும் ஒரே மாதிரிதான் செய்கின்றனர், தப்பும்தவறுமான களவியூகம், பொருத்தமற்ற பந்து வீச்சு மாற்றம், கோலியின் அணித்தேர்வு தவறுகள் என்று இருவருமே தேர்ந்த கேப்டன்கள் என்று கூற முடியாது, அஸ்வின் பந்து வீச்சுக்கு டீப் பாயிண்டில் பீல்டரை நிறுத்தி வீசியது, லார்ட்சில் பசுந்தரை பிட்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு பந்து இன்னும் பளபளப்பை இழக்காத போது ரெய்னாவிடம் பந்தைக் கொடுத்தது, கெவின் பீட்டர்சன், இயன் பெல், அலிஸ்டர் குக் ஆகியோர் போட்டு உரி உரி என்று உரித்த போது ஒன்றும் செய்யத் தெரியாமல் வாளாவிருந்தது. ஆஸ்திரேலியாவில் 4 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குள் இழந்த ஆஸ்திரேலிய அணியை தன் மோசமான களவியூகம், அதாவது ஸ்லிப் இல்லாமல் உமேஷ் யாதவ்வை வீசச் செய்து போட்டியையும் நாசம் செய்து பவுலரையும் நாசம் செய்தது, பந்து வீச்சு மாற்றத்தினால் அணியை விட்டுத் தூக்கும் நிலையிலிருந்த ரிக்கி பாண்டிங்கை சதமல்ல இரட்டைச் சதம் அடிக்க விட்டது. தென் ஆப்பிரிக்காவில் காலிஸ், டிவில்லியர்ஸ் சாத்து சாத்தென்று சாத்திய போது ஒன்றும் செய்யாமல் விழித்தது. புதிய பந்தை 80 ஓவர்கள் சென்றவுடன் எடுக்காமல் பழைய பந்திலேயே மேலும் 64 ஓவர்களை வீசி வெற்றி வாய்ப்பைத் துறந்தது, மே.இ.தீவுகளுக்கு எதிராக 180 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து கட்டாய 15 ஓவர்கள் தொடங்கும் முன் இந்திய அணி 94/3 என்று இருந்தது, ஆனால் இலக்கை விரட்டாமல் இலக்கை நோக்கிப் போகாமல் ட்ராவுக்கு ஆடியது மேலும் ட்ராவுக்கு ஆடியதை நியாயப்படுத்திப் பேசியது என்று தோனியின் டெஸ்ட் கேப்டன்சி ஓட்டைகளை இன்னும் கூட அடுக்கலாம்.

இவற்றில் முக்கால்வாசித் தவறுகளையாவது கோலி தென் ஆப்பிரிக்கா, மற்றும் இங்கிலாந்து தொடர்களில் செய்திருப்பார். ஆகவே தோனி, கோலி இருவரும் தவறுகளில் ஒன்றாகவே தெரிகின்றனர், ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு.

புள்ளி விவரங்கள் ரீதியாக டெஸ்ட் போட்டிகளில் கடந்த 15-20 ஆண்டுகளாக ஒப்பிட்டுப் பார்த்தால் தோனி கேப்டனாக 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார், 40 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 22 போட்டிகளில் வென்று 9-ல் தோற்று 9-ஐ ட்ரா செய்துள்ளார். வெற்றி விகிதம் கோலியின் கீழ் 55% தோனியின் கீழ் 45%

கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளை ஆடியது தோனிதான் அவருக்குப் பிறகு கங்குலி (49), அசாருதீன், சுனில் கவாஸ்கர் (இருவரும் 47 டெஸ்ட்), ஆகியோர் உள்ளனர்.

கோலி 40 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு பட்டவ்டியின் சாதனையைச் சமன் செய்தார். வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர் வெற்றி என்பதில் தோனி ஒரேயொரு தொடரில்தான் வென்றுள்ளார் கோலி 3, திராவிட் 3, கங்குலி 2. ஆனால் உள்நாட்டில் தோனி 8 தொடர்களை வென்று முதலிடம் வகிக்கிறார். கோலி 4 தொடர்களை வென்றுள்ளார்.

முதன் முதலில் அயல்நாட்டில் தொடரை வென்றது பட்டவ்டி கேப்டன்சியில்தான் அவர் 1968-ல் நியூஸிலாந்துக்கு எதிராக இதனைச் சாதித்தார். அதன் பிறகு இந்திய அணி 229 டெஸ்ட் போட்டிகளி; 47-ல் மட்டுமே வென்றுள்ளது.

அயல்நாட்டு வெற்றியில் கோலி 9 போட்டிகளில் வென்று முதலிடம் வகிக்கிறார். 8-ல் தோற்று 4 போட்டிகளை ட்ரா செய்துள்ளார். ஆனால் இந்த 9 வெற்றிகளில் 7 வெற்றி இந்தியாவிலிருந்து வேறுபடாத துணைக்கண்ட வெற்றிகளாக்கும். தென் ஆப்பிரிக்காவில் ஒரு வெற்றி, இங்கிலாந்தில் ஒரு வெற்றி.

தோனியின் 27 வெற்றிகள் என்பதை கோலி முறியடிக்க இன்னமும் 5 வெற்றிகள் தேவை. அதில் 2 இப்போது மே.இ.தீவுகளுக்கு எதிராகச் சாதிக்கப்படலாம். தோனியின் கேப்டன்சியில் இந்தியாவுக்கு வெளியே இந்திய அணி 6 போட்டிகளில்தான் வென்றுள்ளது, இரண்டு க்ளீன் ஸ்வீப் தோல்விகளில் 8-ல் தோல்வி பிறகு இங்கிலாந்துடன் லார்ட்சில் வென்று அதன் பெருமை பேசி முடிப்பதற்குள் 1-3 என்று உதை வாங்கியது இந்திய அணி. 15 வெளிநாட்டுத் தோல்விகள் தோனிக்குச் சொந்தம். காரணம் தோனி உள்நாட்டுக் கிரிக்கெட்டில் அனுபவம் பெற்று கேப்டனாக முன்னேறி வரவில்லை. உள்நாட்டு ரஞ்சி போட்டிகளில் ஆடியிருந்தால்தான் ஜடேஜா முச்சதம் அடிக்கும் போதும் வாசிம் ஜாஃபர் வைத்துக் வறுத்து எடுக்கும் போதும், ராபின் உத்தப்பா அதிரடி இன்னிங்ஸ் ஆடும் போதும் என்ன செய்வதென்று உத்திகளை வகுக்கும் அனுபவம் கிடைக்கும் அது இல்லாமல் காலிஸ், ஆம்லா, டிவில்லியர்ஸ், பாண்டிங், கிளார்க், ஹெய்டன், லாங்கர், கில்கிறிஸ்ட், கெவின் பீட்டர்சன், இயன் பெல், அலிஸ்டர் குக் ஆகியோர் இந்திய அணி பவுலர்களை மைதானம் முழுதும் சிதறடிக்கும் போது தோனி என்ன செய்து விட முடியும்?

கோலிக்கும் இப்போது அதே பிரச்சினைதான்... அது அனுபவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x