Published : 15 Sep 2014 08:33 PM
Last Updated : 15 Sep 2014 08:33 PM

தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட பாஜக-விற்கு அக்கறை இல்லை: ஜெயலலிதா பேச்சு

பொதுவாக தேசியக் கட்சிகளின் சிந்தனை எல்லாம், டெல்லியை மத்திய அரசை சுற்றித் தான் இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் இருக்காது. தமிழ் நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி இடைத்தேர்தலையொட்டி மேயர் வேட்பாளர் கணபதி.ப.ராஜ்குமார் என்பவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. அப்போது அவர் பேசியதாவது:

"இந்தியா என்பது ஒரு கூட்டுக் குடும்பம் போன்றது. இந்தக் கூட்டுக் குடும்பத்தை ஒரு கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் இந்தியா என்கிற கூட்டுக் குடும்பத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல கிளைக் குடும்பங்கள் உள்ளன. அந்தக் கிளைக் குடும்பங்களின் நலனில் முழு அக்கறை கொண்டுள்ளவர்கள் அந்தக் கிளைக் குடும்பங்களின் தலைவர்களே தவிர, கூட்டுக் குடும்பத்தின் தலைவர்கள் அல்ல.

இந்திய நாட்டை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் அவர்களுக்கு தமிழர்களின் உரிமைகளை எப்பாடுபட்டாவது நிலைநாட்ட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா என்றால் நிச்சயமாக அவ்வாறு இல்லை. ஏனென்றால், அவர்கள் பல மாநில மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியிலே ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தமிழர் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம்தான்.

உதாரணத்திற்கு காவேரிப் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்காணிக்க காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்தப் பிரச்சனையில் மத்திய க்ஷதுஞ அரசு தமிழகத்திற்கு இன்னமும் நியாயம் வழங்கவில்லை. இதற்குக் காரணம் என்ன? கர்நாடகாவிலே பாரதிய ஜனதா கட்சிக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், கர்நாடக மக்கள் தங்களுக்கு எதிராக போய்விடுவார்களோ என்ற பயம் பாரதிய ஜனதா கட்சியினரிடம் இருப்பது தான் இதற்குக் காரணம்.

கச்சத்தீவு பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. இந்த பதில் மனுக்களை தற்போதைய மத்திய அரசு இன்னமும் மாற்றவில்லை. இதனை தமிழக பாரதிய ஜனதா கட்சியினரால் தட்டிக் கேட்க முடிந்ததா? இல்லையே!

இதே போல் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நண்பர்களும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை என்றால் தமிழக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். கேரளா கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். மத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ மவுனமாக இருப்பார்கள். தேசிய கட்சிகளால் மாநில பிரச்சனைகளிலேயே முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது என்னும் போது; மாநிலத்தில் உள்ள மாநகராட்சியின் பிரச்சனைக்கு அவர்களால் எப்படி தீர்வு காண முடியும்?

பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே உட்கட்சிப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. இதன் காரணமாகத் தான் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுகிறார்கள்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x