Published : 19 Sep 2018 10:32 AM
Last Updated : 19 Sep 2018 10:32 AM

ஷிகர் தவண் சதம் விளாசல்: இந்திய அணி 285 ரன்கள் குவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

துபாயில் உள்ள ஷேக் சயத் மைதானத் தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் அன்சுமன் ரத் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. தன்வீர் அப்சல் வீசிய 5-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளும், ஷிகர் தவண் ஒரு பவுண்டரியும் விரட்டினர். ரோஹித் சர்மா 22 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கான் பந்தை மிட் ஆஃப் திசையில் தூக்கி அடித்த போது நிஷாகத் கானிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு தவணுடன் இணைந்து ரோஹித் சர்மா 8.3 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து அம்பதி ராயுடு களமிறங் கினார். நேர்த்தியாக விளையாடிய ஷிகர் தவண் 57 பந்துகளில், 8 பவுண்டரி களுடன் அரை சதம் அடித்தார். 20-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. பொறுமையாக விளையாடிய அம்பதி ராயுடு 70 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரி களுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் நவாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவணுடன் இணைந்து அம்பதி ராயுடு 116 ரன்கள் சேர்த்தார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். சீராக ரன்கள் சேர்த்த ஷிகர் தவண் 105 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் தனது 14-வது சதத்தை அடித்தார். இதன் பின்னர் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்த ஷிகர் தவண், இஷான் கான் வீசிய 38 மற்றும் 40-வது ஓவர்களில் இரு சிக்ஸர்கள் விளாசினார்.

120 பந்துகளில் 127 ரன்கள் விளாசிய நிலையில் கின்சிட் ஷா பந்தில், தன்விர் அப்சலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஷிகர் தவண். அப்போது ஸ்கோர் 40.4 ஓவர்களில் 240 ஆக இருந்தது. இதை யடுத்து களமிறங்கிய தோனி 3 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் இஷான் கான் பந்தில் ஆட்டமிழந்தார். கின்சிட் ஷா வீசிய அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் (33) வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 9 ரன்களிலும், ஷர்துல் தாக்குர் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கேதார் ஜாதவ் 27 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது. ஹாங்காங் அணி தரப்பில் கின்சிட் ஷா 3, இஷான் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து ஹாங்காங் அணி 286 ரன்கள் இலக்குடன் பேட் செய்யத் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x