Last Updated : 23 Sep, 2018 06:55 PM

 

Published : 23 Sep 2018 06:55 PM
Last Updated : 23 Sep 2018 06:55 PM

ஸ்ரேயாஸ் அய்யர் 10 சிக்சர்களுடன் சதம்; பிரிதிவி ஷா 61 பந்துகளில் சதம்: 400 ரன்கள் குவித்து ரயில்வேஸை நொறுக்கியது மும்பை

பெங்களூருவில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர், பிரிதிவி ஷா விளாசலில் ரயில்வேஸ் அணியை 173 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் 400 ரன்களுக்கு மேல்அடித்த 2-வது அணி எனும் பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது. இதற்கு முன் 2010-ம் ஆண்டு ரயில்வேஸ் அணிக்கு எதிராக மத்தியப் பிரதேசம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 412 ரன்கள் குவித்தது. அதன்பின் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரரும் மும்பை அணியின் கேப்டனுமான அஜின்கயே ரஹானே 3 ரன்களில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யருடன், பிரிதிவி ஷா ஜோடி சேர்ந்தார்.

இருவரும் சேர்ந்து ரயில்வேஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார்கள். பேட்டிங்குக்கு சாதகமான பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிகளக்கும் பறந்தன. பிரித்திவி ஷா 61 பந்துகளில் சதமடித்து, 129 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 14 பவுண்டரிகள் ஒருசிக்ஸர் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 161 ரன்கள் சேர்த்தனர். பிரிதிவி ஷா முதல்போட்டியில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார் ஆனால், இந்தப் போட்டியில் சதம் அடித்து ஏ லெவன் போட்டியில் முதலாவது சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து விளாசலில் ஈடுபட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 144 ரன்களில் அணுபிரித்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் விளாசினார்.

அதன்பின் வந்த சூரியகுமார் யாதவ்(67), சித்தேஸ் லாட்(30 நாட்அவுட்) ரன்கள் சேர்த்து மும்பை அணி 400 ரன்களை எட்ட உதவினார்கள்.

மிகப்பெரிய இலக்கான 401 ரன்களைத் துரத்திய ரயில்வேஸ் அணி 42.4 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 173 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சவுரவ் வகாஸ்கர்(48), பிரசாந்த் அவஸ்தி(41), அங்கித் யாதவ்(35) ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி இதற்கு முன் முதலிரு போட்டிகளில் பரோடா அணியை 9 விக்கெட்டுகளிலும், கர்நாடக அணியை 88 ரன்களிலும் வீழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x