Published : 05 Sep 2018 05:47 PM
Last Updated : 05 Sep 2018 05:47 PM

சிறிய ஊரிலிருந்து வந்து நாட்டுக்காக நீ செய்தது...: ஆர்.பி.சிங்கிற்கு இர்பான் பத்தான் நெகிழ்ச்சிப் பிரியா விடை

இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் பிரியாவிடை வாழ்த்துச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

2005 முதல் 2011 வரை பல்வேறு வடிவங்களில் 82 ஆட்டங்களில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார்.

இவரது சிறப்புத்தன்மை என்னவெனில் இவர் பிட்சிலிருந்து பந்துகளை வலது கை பேட்ஸ்மென்களின் தோள்பட்டைக்கு எழுப்பும் திறமை. 14 டெஸ்ட் போட்டிகளே என்றாலும் இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஒரு மதிப்புக் கூட்டுதலைச் செய்து வெற்றிகளில் முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். ஜனவரி 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கட்டாந்தரை பிட்ச் ஆன பைசலாபாத்தில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய வெற்றியை உறுதி செய்தார். 2007-ல் இங்கிலாந்தில் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி தொடரை வென்ற போது இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் வயிற்றில் தனது அதீத ஸ்விங் மூலம் ஜாகீர் கானுடன் சேர்ந்து இவரும் புளியைக் கரைத்தார். லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இவர் இடம்பெற்றார்.

ஜனவரி 2008-ல் பெர்த்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயப் போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 2008-க்குப் பிறகு 3 ஆண்டுகள் இடைவெளியில் 2011-ல் இங்கிலாந்தில் இந்திய அணி பவுலர்கள் காயத்தினால் அவதியுற்றப்போது 4வது டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்டு 34 ஓவர்களை வீசினாலும் விக்கெட் எடுக்க முடியவில்லை, இதோடு அவர் டெஸ்ட் வாழ்வு முடிவுக்கு வந்தது.

முதல் தர கிரிக்கெட்டில் ஆர்.பி.சிங். 94 போட்டிகளில் 301 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் வீரர்கள் ஆர்.பி.சிங்குக்கு பிரியாவிடை ட்வீட் செய்துள்ளனர்:

இர்பான் பத்தான்: வெல் டன் பிரதர்! சிறிய ஊரிலிருந்து வந்து நாட்டுக்காக நீ சாதித்தது குறித்து பெருமைப் படுக.

சுரேஷ் ரெய்னா: இனி வரும் வாழ்க்கை வெற்றியுடன் நடைபெற வாழ்த்துக்கள் தோழா! உன் பயணத்தில் நானும் உடனிருந்தேன் என்பதில் மகிழ்ச்சி. இருவரும் ஏற்றமும் இறக்கமும் இரண்டையும் பார்த்துள்ளோம். இப்போது உனக்கு புதிய தொடக்கம்...தொடர்ந்து எங்களுக்கு பலவழிகளில் எப்போதும் போல் உத்வேகம் அளிப்பாய் என்று நம்புகிறேன்.

லஷ்மண்: மிக நல்ல கிரிக்கெட் ஆடியதற்கான வாழ்த்துக்கள் ஆர்பி. 2வது இன்னிங்ஸ் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

விரேந்திர சேவாக்: மகிழ்ச்சியான 2வது இன்னிங்ச் ஆர்.பி. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x