Last Updated : 07 Sep, 2018 10:45 AM

 

Published : 07 Sep 2018 10:45 AM
Last Updated : 07 Sep 2018 10:45 AM

முச்சத மலரும் நினைவுகளுடன் கருண் நாயர் இனி நேரடியாகப் பயிற்சியாளர்தானா?

இன்று ஓவலில் 5வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராகவெல்லாம் பெரிய பயிற்சியெல்லாம் இந்திய பேட்ஸ்மென்கள் எடுத்துக் கொண்டதில்லை. லான்ஸ் கிப்ஸ், டெரிக் அண்டர்வுட், இக்பால் காசிம், அப்துல் காதிர் காலம் முதல் ஷேன்வார்ன், முரளிதரன் காலம் வரை ஸ்பின் பந்தை எதிர்கொள்ள ஸ்பெஷல் செஷன் போட்டு பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டதில்லை.

சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னை ஒரு சொந்த வைரியாகப் பார்த்ததாலும் அவர் பந்து வீச்சை முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஷேன் வார்னா? சச்சின் டெண்டுல்கரா என்று முடிவு கட்ட எல்.சிவராமகிருஷ்ண்டன், ரவிசாஸ்திரி ஆகியோரை அழைத்து பிரத்யேக பயிற்சி மேற்கொண்டார்.

சேவாக் ஸ்பின்னர்களை பொதுவாக மதிக்கவே மாட்டார், குறிப்பாக ஆஃப் ஸ்பின்னர்களை அவர் ஒரு பவுலராகவே கருதுவதில்லை.

இந்நிலையில் பெரிய அச்சுறுத்தல் இல்லாத மொயின் அலியை, அதுவும் ஸ்வீப் ஷாட் ஆட கடும் பயிற்சி மேற்கொள்கிறது இந்த இந்திய அணி. இதுதான் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சிறந்த அணி என்று ரவி சாஸ்திரி கொம்பு சீவி விடுகிறார்!!

இப்படியிருக்க இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் சேவாகுக்குப் பிறகு முச்சதம் விளாசிய கருண் நாயர் ஓரிரு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக முழுக்கவும் ஓரங்கட்டப்பட்டு, இன்று இந்தியா ஏ உள்ளிட்ட அணிகளில் சிறப்பாக ஆடி அணியில் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார், ஷிகர் தவண், ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு உள்ள லாபி இவருக்கு இல்லை.

இந்நிலையில் இன்று ஓவல் டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் நேற்று பயிற்சியில் மூத்த வீரர்க்ளுக்கே ஆலோசனைகளையும், ஏகப்பட்ட பந்துகளை த்ரோ செய்தும் பயிற்சியும் அளித்துள்ளார் கருண் நாயர்.

விராட் கோலி, புஜாரா, ரஹானே, ஷிகர் தவண், ரிஷப் பந்த் ஆகியோருக்கு கருண் நாயர் ஆலோசனைகளை வழங்கியதோடு பந்துகளை த்ரோ செய்து பயிற்சியும் அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முச்சதத்தில் ஸ்வீப் ஷாட்டை மிக அருமையாகப் பயன்படுத்தியதோடு அதிகமாகவும் ஆடினார் கருண்நாயர்.

இன்றைய அணியில் ஸ்வீப் ஷாட்டை அதிகம் பயன்படுத்துவது அஸ்வின், இஷாந்த் சர்மா!!. 20 ஆண்டுகளில் இல்லாத அரிய இந்த அணியில் ஸ்வீப் ஷாட்டை ஆடுவது கீழ்வரிசையில் உள்ள அஸ்வின், இஷாந்த் சர்மா!!

விராட் கோலி உட்பட இப்போதுள்ள டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களுக்கு ஸ்வீப் ஷாட் இயல்பாக வருவதில்லை. ராகுல் ஸ்வீப் ஆடுவார், ஆனால் மொயின் அலி வரும் வரை அவர் களத்தில் நிற்பாரா என்பது தெரியவில்லை.

இப்போது பிரச்சினை என்னவெனில் கருண் நாயரை 6ம் நிலையில் பேட்டிங்கில் களமிறக்க வாய்ப்பிருந்தும் அவர் விளையாடும் 11-க்குள் நுழைய முடியவில்லை. பிரித்வி ஷா, ஹனுமன் விஹாரி போன்ற வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், இதில் ஹனுமன் விஹாரிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

எனவே ராஜஸ்தான் பவுலர் பங்கஜ் சிங்குக்கு பந்து வீச்சில் நடந்தது போல் கருண் நாயர் சென்னை முச்சத மலரும் நினைவுகளுடன் எஞ்சிய வாழ்நாளைப் பயிற்சியாளராகக் கழிக்க வேண்டியதுதானா? என்ற கேள்வி எழுகிறது. பதில் கூறுமா விராட் கோலி-ரவிசாஸ்திரி கூட்டணி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x