Last Updated : 07 Sep, 2018 06:32 PM

 

Published : 07 Sep 2018 06:32 PM
Last Updated : 07 Sep 2018 06:32 PM

பாண்டியா, அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா, விஹாரி சேர்ப்பு: இங்கிலாந்துக்கு ஒரு விக்கெட் இழப்பு: குக் நிலையான ஆட்டம்

 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து உணவு இடைவேளை வரை 28 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்துள்ளது. குக் 37 ரன்களுடனும், மொயின் அலி 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்று ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்திய ஒருபோட்டியில் மட்டும் வென்று இந்தப் போட்டியை ஒருமுறைக்காகவே எதிர்கொள்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் அலிஸ்டார் குக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆதலால், போட்டி தொடங்கியவுடன் இந்திய வீரர்கள் அனைவரும் குக்கை கைகுலுக்கி வரவேற்றனர். ஓவல் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று குக் களமிறங்கும் போது கைதட்டி வரவேற்பு அளித்தனர்.

அதேபோல, இந்திய வீரர் ஹனுமா விஹாரி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்த போட்டியில்அறிமுகமானார். ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியின் தொப்பியை வழங்கி கேப்டன் விராட் கோலி வரவேற்றார். இதன் மூலம் இந்திய அணிக்குக் களமிறங்கும் 292-வது வீரர் எனும் பெருமையை ஹனுமா விஹாரி பெற்றார்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா வாஹிரியும், அஸ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஓவல் மைதானமும், சவுத்தாம்டன் மைதானமும் ஏறக்குறைய ஒரேமாதிரியான மைதானமாகும். இங்கு பந்துகள் கடைசி இருநாட்களில் நன்கு சுழலும் என்பதால், அனுபவம் நிறைந்த சுழற்பந்துவீச்சாளர் இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் அஸ்வின் அணியில் இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

அஸ்வினுடைய பந்துகள் நன்கு சுழலும், கடைசி நாட்களில் எதிரணயினருக்கு விளையாடுவதற்குக் கடினமாக இருக்கும். ஆனால், அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, ரவிந்திர ஜடேஜாவை அணியில் எடுத்திருப்பது அணியை இன்னும் பலவீனப்படுத்தும்.

அஸ்வினுக்கு கடந்த 4-வது போட்டியின்போது இடுப்பு வலி இருந்ததன் காரணமாக போட்டியில் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், உடற்தகுதி முழுமையாக குணமடையாத நிலையிலும்கூட அஸ்வின் உடற்தகுதி பெற்றுவிட்டார் என்றுகூறி போட்டியில் பங்கேற்றார்.

இப்போதுள்ள நிலையில், டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துவிட்டாலும் கூட இந்தப் போட்டியில் கவுரவமான வெற்றியைப் பெறுவது அவசியம். அதற்காக அனுபவமிக்க சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை அணியில் நீடித்து வைத்திருக்கலாம்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். கடைசி சர்வதேச போட்டி என்பதால் குக் பதற்றமில்லாமல், மிகவும் கூலாக பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார். வழக்கமாக விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிடும் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வரைவிக்கெட்டுகளை இழக்கவில்லை.

ஜென்னிங்ஸ், குக் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்களைச் சேர்த்தனர். ஜடேஜா வீசிய 24-வது ஓவரில் ஜென்னிங்ஸ் 23 ரன்கள் சேர்த்திருந்தபோது ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 60 ரன்களுக்கு முதல்விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x