Published : 29 Sep 2018 09:08 AM
Last Updated : 29 Sep 2018 09:08 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா  மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஸ்எல்) கால்பந்து தொடரின் 5-வது சீசன் போட்டிகள் இன்று கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி, இருமுறை 2-வது இடம் பிடித்த - கேரளா அணியுடன் மோதுகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி, இரு முறை சாம்பியனான கொல்கத்தா, கேரளா, கோவா, டெல்லி, பெங்களூரு, நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு, மும்பை, புனே, ஜாம்ஷெட்பூர் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கொல்கத்தாவில் இன்று தொடங்கும் இந்த உள்ளூர் கால்பந்து திருவிழா சுமார் 6 மாத காலங்கள் நடைபெற உள்ளது.

இந்த சீசனில் 3 இடைவெளிகள் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் 16-ம் தேதி வரை முதல் இடைவெளியும், நவம்பர் 12 முதல் 20-ம் தேதி வரை 2-வது இடைவெளியும் அமைந்துள்ளது. இந்த இரு இடைவெளியும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) ஏற்படுத்தி உள்ளது. கடைசி இடைவெளி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய கால்பந்து அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்கான பயிற்சி முகாமுக்காக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் வார இறுதி நாட்களில் இரு ஆட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை வார இறுதி நாட்களில் ஒரு ஆட்டம் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடரின் அனைத்து ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இரு முறை சாம்பியனான கொல்கத்தா அணி, இருமுறை 2-வது இடம் பிடித்த கேரளா அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூருவில் கன்டிவரா மைதானத்தில் நடைபெறுகிறது.

கொல்கத்தா, கேரளா அணிகள் கடந்த சீசனில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறியது. 10 அணிகள் கலந்து கொண்ட தொடரில் கொல்கத்தா அணியால் 9-வது இடமே பிடிக்க முடிந்தது. அதேவேளையில் கேரளா அணி 6-வது இடத்தை பிடித்தது. இந்த சீசனில் இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. இதில் 2014 மற்றும் 2016-ம் ஆண்டு இறுதிப் போட்டியும் அடங்கும். கேரளா அணி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 4 ஆட்டங்களும் டிராவில் முடிந்திருந்தது.

கடந்த சீசனில் கேரளா அணிக்கு பயிற்சியாளராக இருந்த ஸ்டீவ் கோப்பல் இம்முறை கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக மாறியுள்ளார். இவரது பயிற்சியின் கீழ்தான் கேரளா அணி கடந்த 2016-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி கண்டிருந்தது. ஸ்டீவ் கோப்பல் கூறுகையில், “இந்த சீசனின் தொடக்கத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்பெயினில் பயனுள்ள வகையில் நாங்கள் பயிற்சி பெற முடிந்தது. இதில் அனைத்து வீரர்களின் திறனையும் சோதித்து பார்ப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதற்கு களத்தில் எங்களது திறனை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது” என்றார்.

கொல்கத்தா அணியில் முன்னணி வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அணியில் இடம் பெற்றுள்ள 7 வெளிநாட்டு வீரர்களில் 6 பேர், ஐஸ்எல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களில் முக்கியமானவர் மானுவல் லான்சரோட். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவர், கடந்த சீசனில் கோவா அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் களத்தில் 1500 நிமிடங்களை செலவிட்டு 13 கோல்கள் அடித்திருந்தார். மேலும் 6 கோல்கள் அடிக்க உதவி செய்திருந்தார். இம்முறை கொல்கத்தா அணிக்கு கேப்டனாக களமிறங்கும் லான்சரோட் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இதேபோல் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் முன்கள வீரரான நைஜீரியாவின் கலு யுசெவும் பலம் சேர்ப்பவராக உள்ளார். கடந்த சீசினில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர், 13 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். பிரேசிலை சேர்ந்த எவர்டன் சான்டோஸூம் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான டிபன்டரான ஜான் ஜான்சனை இம்முறை கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பெங்களூரு அணிக்காக கடந்த சீசன்களில் விளையாடி வந்த அவர், கடந்த 2017-ல் கொல்கத்தா அணிக்கு இடம் மாறினார். இவர்களுடன் பிரேசிலின் ஜெர்சன் வியரா, மொராக்கோவின் நூஸ்ஸைர் எல் மைமாயூன், கேமரூன் ஆந்ரே பிக்கி ஆகியோரும் வெளிநாட்டு வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

மேலும் அணியில் இடம்பெற்றுள்ள 19 இந்தியர்களில் தேபிஜித் மஜூம்தான், பிரபிர்தாஸ், யுஜென்சன் லிங்டோ, ஜெயேஷ் ரானே, கோமல் தாட்டல், ஹிதேஷ் சர்மா ஆகிய 6 பேர், கடந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடியிருந்தனர். இவர்களில் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு அணிக்கு திரும்பியுள்ள நட்சத்திர வீரரான யுஜென்சன் லிங்டோ மீது எதிர்பார்ப்பு உள்ளது. பயிற்சியாளர் ஸ்டீவ் கோப்பலுக்கு துணை பயிற்சியாளரான சஞ்ஜெய் சென் பக்கபலமாக இருந்து வருகிறார். ஸ்பெயினில் நடைபெற்ற 3 பயிற்சி ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

கேரளா அணி இந்த சீசனில் முதன்முறையாக அணியின் இணை உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் தொடரை சந்திக்கிறது. அணியில் தனக்கு இருந்த 20 சதவீத பங்குகளை சச்சின் விற்பனை செய்துவிட்டதால் கேரள அணி இனிமேல் தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளனர்.

கேரள அணியின் டிபன்ஸ் சிரில் காளி (பிரான்ஸ்), நெமஞ்சா லாகிக் பெசிக் (செர்பியா), கேப்டன் சந்தேஷ் ஜிகன், அனாஸ் எடதோடிகா (இந்தியா) ஆகியோரை கொண்டு வலுவானதாக உள்ளது. இந்த கூட்டணி கொல்கத்தா அணிக்கு சவால் அளிக்கக்கூடும். இவர்களுடன் ஜாகீர் முண்டம்பாரா, ஹாலிச்சரண் நர்ஸரி, சீமினேன் டவுன்கல் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். அணியின் சென்ட்ரல் மிட்பீல்டு மட்டுமே பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸூக்கு சற்று கவலை கொடுக்கக்கூடும். இந்த பகுதியில் வலுவான இந்திய வீரர்கள் யாரும் இல்லாதது சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.இன்றைய யுத்தம்

நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1

ஜாம்ஷெட்பூர் அணியில் டிம் காஹில்

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய டிம் காஹில், ஐஎஸ்எல் தொடரில் இந்த சீசனில் ஜாம்ஷெட்பூர் அணிக்காக களமிறங்குகிறார். 38 வயதான அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஜாம்ஷெட்பூர் அணியில் இணைந்துள்ளார்.

ஆசிய கோப்பையில் 3 முறையும், உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4 முறையும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ள டிம் காஹில் 50 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக விளையாடி உள்ள பாவ்லோ மச்சடோ, வெனிசுலா வீரர் மிகு ஆகியோரும் கவனிக்கத் தகுந்தவர்களாக உள்ளனர். மச்சடோ மும்பை அணிக்காவும், மிகு பெங்களூரு அணிக்காகவும் களமிறங்குகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x