Published : 28 Sep 2018 09:34 AM
Last Updated : 28 Sep 2018 09:34 AM

இந்திய அணிக்கு மட்டும் ராஜ உபசரிப்பு; மற்ற அணிகளுக்கு அலைக்கழிப்பா? - கொதிப்படைந்த மற்ற அணிகளின் நியாயம்

ஆசியக் கோப்பைப் போட்டித் தொடர் இறுதிப் போட்டி இன்று இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் வேளையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு தடவிக் கொண்டு ஷெட்யூல் செய்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பணம் உள்ள அணிகளுக்கு ஒரு வசதி, அவர்கள் கேட்கும் வசதியைக் கொடுப்பது, அவர்கள் கேட்கும் மைதானம், அவர்கள் கேட்கும் நடுவர்கள், அவர்கள் கேட்கும் வர்ணனையாளர்கள் அவர்கள் கேட்கும் பிட்ச் உள்ளிட்ட விளையாட்டு நிலமைகள் (Playing Conditions), பயிற்சி, இத்யாதி இத்யாதி உள்ளிட்ட வசதிகள் செய்து தர ஏ.சிசி ஹி..ஹி.. என்று முன்வரும்போது ஏழை அணிகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், இலங்கை போன்றவைகளுக்கு ‘நாங்கள் சொல்வதுதான் ஷெட்யூல் ஆடுவது உன் தலையெழுத்து’ என்ற ரீதியில் ஏசிசி இந்திய அணிக்கு மட்டும் ராஜ உபசரிப்பு செய்ய, மற்ற அணிகளுக்கு மட்டும் அலைக்கழிப்பு நடந்துள்ளது. அதுவும் வங்கதேச அணிக்கு போட்ட ஷெட்யூல் எல்லாம் அந்தவெயிலில் மகாபாவம்தான்!

பிரச்சினை என்னவெனில் 47 டிகிரி வெயில், பவுலர்கள் ஓடி வரும்போது கூட சட்டைநுனி அசையாத ஈரப்பதம், கடும் வியர்வை இதில் மற்ற அணிகள் அபுதாபி, துபாய் என்று மாறி மாறி பயணம் செய்து ஆட வேண்டும், ஆனால் கோடீஸ்வரர்களான வீரர்கள் கொண்ட சொகுசு இந்திய அணி மட்டும் நேரடியாக ஏ/சி அறையிலிருந்து துபாயில் மட்டும் அனைத்து போட்டிகளை விளையாடும். இது என்ன நியாயம்? என்கிற தொனியில் சூசகமாக சர்பராஸ் அகமட், வங்கதேசத்தின் மஷ்ரபே மோர்டசா, ஆப்கன் கேப்டன் அஷ்கர் ஆப்கன் ஆகியோர் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்திய வீரர்கள் அழகான துபாயில் ஷாப்பிங் சென்று நேரத்தைச் செலவிடவும் விதம் விதமாக பொருட்களை வாங்கிக் குவிக்கவும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், தோனி கேப்டன்சியில் ஆடிய இந்திய அணியை அலற விட்டு டை ஆன அந்தப் போட்டிக்குப் பிறகு கூறும்போது, “துபாய்தான் எங்களுக்கு மிகவு பொருத்தமான இடம். எங்களை விட துபாயில் அதிகப்போட்டிகளை ஆடியவர்கள் இருக்க முடியாது. ஆனால் எங்கள் போட்டிகள் பெரும்பாலும் அபுதாபியில் நடந்தது. துபாயில் மட்டும் நடந்திருந்தால் நாங்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்போம் என்பதை உறுதியாகக் கூற முடியும். எனவே எங்களுக்கு கொஞ்சம் துரோகம் இழைக்கப்பட்டதாகவே கருதுகிறோம்” என்றார். அவர் சிரித்துக் கொண்டே கூறினாலும் முகத்தில் அறைந்த உண்மை அதுதான்.

துபாய்க்கும் அபுதாபுக்கும் இடையே 140 கிமீ தூரம், ஆனால் 50 டிகிரி வெயிலில் காற்றற்ற இடுகாட்டு பயணத்தை யார்தான் விரும்புவார்கள், இதைத்தான் சர்பராஸ் அகமட் கேட்டார்:

“இந்திய அணிக்கு மட்டும் அனைத்துப் போட்டிகளும் துபாயில். இங்கு பயணம் என்பது கடினம், கடும் வெயிலில் போட்டிகளுக்கு இடையே ஒன்றரை மணி நேரப் பயணம் என்றாலும் இப்பகுதியில் அது கடினமான ஒன்று. ஒருநாள் ஆடிவிட்டு மறுநாளும் ஆட வேண்டியிருக்கிறது, இது அனைத்து அணிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அபுதாபியில் போட்டி என்றால் எல்லா அணிகளும்தான் அங்கு ஆடவேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன நினைத்து இந்த ஷெட்யூலை அமைத்தனர் என்று புரியவில்லை” என்று கடுமையாகச் சாடினார்.

டிக்கெட் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்தியப் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்க வேண்டும் என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாகவும் இந்த ஆசியக் கோப்பையே பிசிசிஐ நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் ஒருதரப்பில் பேசப்பட்டதும் இதனுடன் சேர்த்து நோக்கத்தக்கது.

மோர்டசாவும் இந்திய அணியின் நலன்களுக்காக ஷெட்யூலை மாற்றி மற்ற அணிகளை வதைக்கலாமா? நாங்களும் எங்கள் தேசத்துக்காகவே ஆடுகிறோம், நாங்களும் வெற்றி தோல்விகளுக்குப் பதில் கூற வேண்டும் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

ஹாங்காங் போட்டியில் ஆடி மறுநாளே பாகிஸ்தானுடன் போட்டியா? பாகிஸ்தானுடன் தோற்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்திய அணிக்கு எதிராக சதி செய்கிறது என்ற தொனியில் சேவாகின் தேசியவாத முடிசிலிர்த்ததே அன்று... அதே முடி இவர்களின் இந்தக் கேள்விகளுக்குக் கொஞ்சமாவது சிலிர்த்து எழுமா?

சினிமாத்துறையில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு ஒரு வசதி துணை நடிகர்களுக்கு ஒர் வசதி, அவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய காரவன், துணை நடிகர்களுக்கு மரத்தடி என்பது போல் பிசிசிஐ-யை பிரதிநித்துவம் செய்யும் இந்திய அணிக்கு ஒரு வசதி, மற்ற ஏழை அணிகளுக்கு ஒரு வசதி நிச்சயம் விசாரணைக்கு உகந்ததே. கோடீஸ்வரர்களான இந்திய வீரர்கள் அலுங்காமல் குலுங்காமல் வென்று கோப்பையை தட்டிச் செல்ல ஒரு வசதி, மற்ற அணிகள் ஏதோ இவர்களுக்கு தோற்று சேவகம் செய்ய வந்த அணி போல் நடத்துவது என்ன நியாயம் என்ற மற்ற அணி கேப்டன்களின் கேள்வியின் அடியில் ஒளிந்திருக்கும் வாதம் நியாயமானதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x