Published : 07 Sep 2018 09:00 AM
Last Updated : 07 Sep 2018 09:00 AM

கிரிக்கெட்டையும் தாண்டி கபடியை  கொண்டு செல்ல வேண்டும்: நடிகர் விஜய் சேதுபதி விருப்பம்

விவோ புரோ கபடியின் 6-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் தலைமையில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் புரோ கபடி போட்டிக்கான தமிழகத்தின் முகமாக நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டார்.

விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கூறுகையில், “கபடி நம் தமிழர்களுடைய விளையாட்டு. நம் வரலாற்றோடும் பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்த ஒன்று. இந்த வருட புரோ கபடி சீசனில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் முகமாக இருந்து இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் தமிழர்களுடைய விளையாட்டான கபடியை நாம்தான் மேம்படுத்தவேண்டும். கிரிக்கெட்டையும் தாண்டி  கபடி அனைத்து இடங்களையும் சென்றடைய வேண்டும். இம்முறை நானும் மைதானத்துக்கு வந்து போட்டியை கண்டுகளிப்பதுடன் வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளேன்” என்றார்.

தமிழ்தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறுகையில், ஆசிய விளையாட்டில் ஈரான் அணி 2010-ம் ஆண்டில் இருந்தே கடுமையாக போராடி வருகிறது. கடின உழைப்பும், விடா முயற்சியும்தான் அவர்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. எல்லா நேரத்திலும் எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது.

ஒட்டுமொத்த செயல்திறனுடன் செயல்படாததால் நாம் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. புரோ கபடியை பொறுத்தவரையில் கடந்த முறை தமிழ்தலைவாஸ் அணி கடைசி கட்ட நிமிடங்களில் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக செயல்பட தவறியதால் வெற்றிகளை தவறவிட்டது. இம்முறை அதில் கவனம் செலுத்தி உள்ளோம். தமிழ் மக்கள் எங்களுக்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.

20 பேர் கொண்ட தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சி.அருண், டி.கோபு, பிரதாப், ஜெயசீலன், பார்த்திபன் ஆகிய 5 பேர் இடம் பிடித்துள்ளனர்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும்அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x