Last Updated : 09 Sep, 2018 03:35 PM

 

Published : 09 Sep 2018 03:35 PM
Last Updated : 09 Sep 2018 03:35 PM

இங்கிலாந்தில் தோல்வி, வீரர்கள் காயம்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைக் ‘குடையக் காத்திருக்கிறது சிஓஏ’

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தொடரை பறிகொடுத்தது, சர்ச்சைக்குரிய விதத்தில் அணித்தேர்வு, வீரர்கள் காயத்தை மறைத்து விளையாடச் செய்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டி (சிஓஏ) தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைக் குடையக் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு 2 மாதப் பயணமாக இந்திய அணி சென்றது. அந்நாட்டு அணியுடன் டி20 தொடரை மட்டும் வென்ற இந்திய அணி ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடரை இழந்தது. இந்தத் தொடரில் வீரர்கள் குறித்த தேர்வு, ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களை மாற்றியது, காயத்துடன் வீரர்களை விளையாடச் செய்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவை குறித்தும், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்தும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் கமிட்டி அறிக்கை கேட்கும் எனத் தெரிகிறது.

இதற்கு முன் இருந்த ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் கிரேக் சேப்பலுக்கு பின் வந்த எந்தப் பயிற்சியாளரும் ஒவ்வொரு தொடர் முடிந்தபின், ஒவ்வொரு வீரர்கள் குறித்தும், ஒட்டுமொத்த அணி குறித்தும் திறனாய்வு அறிக்கையை அளிக்கவில்லை. அணியின் மேலாளர் மட்டுமே அறிக்கை அளித்து வந்தார்.

அணியின் மேலாளர் பிசிசிஐ அமைப்பிடம் அளிக்கும் அறிக்கை என்பது, நிர்வாக ரீதியாக இருக்கும். அதாவது அணி வீரர்களுக்குத் தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், உணவு வகைகள், பயிற்சிச்சூழல், உள்ளிட்ட வசதிகள் குறித்து மட்டுமே அறிக்கை அளிப்பார்கள்.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் இப்போது பயிற்சியாளரிடம் அறிக்கையை நிர்வாகக் கமிட்டி கேட்கும் எனத் தெரிகிறது.

இது குறித்து பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:

செப்டம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் மும்பையில் நடக்க உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக புதிய சட்டங்களை அமல்படுத்துவது, இங்கிலாந்தில் இந்திய அணியின் செயல்பாடு குறித்தும் முக்கியமாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நேரடியாக அழைத்து அணியின் செயல்பாட்டை கேட்கிறார்களா அல்லது அறிக்கையை வழங்கும்படி உத்தரவிடப்போகிறார்களா எனத் தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில், கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி செயல்பாட்டில் இல்லை.

தேவைப்பட்டால், அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்தைம் அழைத்து அவரின் கருத்துக்களையும் கேட்கலாம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு தொடர் முடிந்தபின்பும் அது வெளிநாடு அல்லது உள்நாட்டில் கிரிக்கெட் தொடர் நடந்திருந்தாலும் அறிக்கையை மேலாளர்தான் அளிப்பார். பயிற்சியாளர் அளிக்க மாட்டார்.

ஆனால், மேலாளர் அளிக்கும் அறிக்கை அணியின் செயல்பாடு குறித்து இருக்காது என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். ஆதலால், அணியின் செயல்பாடு குறித்த அறிக்கை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தேர்வுக்குழுத்தலைவர் எம்எஸ்கே பிரசாத் அறிக்கையில்தான் முழுமையாக இருக்கும்.

மேலும் இந்திய அணியின் உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹத்திடமும் ஒவ்வொரு வீரர்கள் குறித்த அறிக்கை கேட்கப்படலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் வலுக்கட்டாயமாக விளையாடக் கட்டாயப்படுத்தப்பட்டாரா?, சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டிக்கு அஸ்வின் முழு உடற்தகுதியுடன் இருந்தாரா?

 

சிறிய காயம் இருக்கும்போதே வீரர்களுக்கு ஓய்வு அளிக்காமல் காயம் பெரிதாக வரும்வரை விளையாட அனுமதிக்கப்பட்டதா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அறிக்கை கோரப்படலாம் இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x