Published : 12 Sep 2018 09:09 AM
Last Updated : 12 Sep 2018 09:09 AM

பயம் காட்டிய ராகுல், ரிஷப் பந்த்: இங்கிலாந்து 4-1 வெற்றி; கிளென் மெக்ராவை முறியடித்தார் ஆண்டர்சன்

சாதனைகள் பல நிகழ்த்தப்பட்ட குக் பிரியாவிடை ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 4-1 என்று கைப்பற்றி, ஓய்வு பெற்ற அலிஸ்டர் குக்கிற்கு தொடர் வெற்றியைப் பரிசாக அளித்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 564 விக்கெட்டுகளுடன் கிளென் மெக்ரா சாதனையை முறியடித்து உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத மகாவிரட்டலை முதலில் ராகுல், ரஹானே, பிறகு ராகுல் பந்த் மேற்கொண்டனர். தேநீர் இடைவேளையின் போது வெற்றியின் ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது.

ஆனால் ஆதில் ரஷீத் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு ஸ்பாட்டைப் பயன்படுத்தி ஒரு ஷேன் வார்ன் பந்தில் ராகுலை பவுல்டு செய்ய, அதே இடத்தில் இன்னொரு கூக்ளியை வீசி ரிஷப் பந்த்தின் ரத்த வேகத்தைச் சோதனை செய்து வீழ்த்த இந்த இரண்டு விக்கெட்டுகள் சம்பிரதாயங்களை விரைவுபடுத்தியது.

ஒருகட்டத்தில் 33 ஓவர்களில் 166 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது, ராகுல், ரிஷப் பந்த் இருவரும் சதமடித்து கிரீசில் இருந்தனர். கே.எல்.ராகுல் நினைத்திருப்பார் முதலிலிருந்தே பவுலர்களைப் பற்றிய கவலையில்லாமல் அலட்சிய புறக்கணிப்புடன் பேட் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று. அப்படித்தான் ஆடினார் ராகுல், அதுவும் சதம் அடிப்பதற்காக பென் ஸ்டோக்ஸை ஒரே ஓவரில் அடித்த ஷார்ட் ஆஃப் த மேட்ச் எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸ், பிறகு ஒரு அற்புத பவுண்டரி, கடைசியில் ஒரு டென்னிஸ் ஃபோர்ஹேண்ட் நேர் பவுண்டரி என்று சதத்தைப் பூர்த்தி செய்தார். சதம் அடித்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரு ஸ்டெப் இறங்கி மிட்விக்கெட்டில் தூக்கி அடித்த ஹைபிளிக் பிரமாதமான ஷாட் ஆகும். சச்சின் களமிறங்கியவுடனேயே இத்தகைய ஷாட்களை ஆடுவார்.

 

ஆனால் அவுட் ஆன பந்து ஒரு விதத்தில் வேஸ்ட்தான், இடது காலைத் தூக்கி லெக் ஸ்டம்புக்கு வெளியே நீட்டியிருந்தால் அந்தப் பந்து ஒருவேஸ்ட் பந்துதான் ஆதில் ரஷீத்தும் ஏதோ விக்கெட்டுகளைக் கைப்பற்ற லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசித் திருப்பவில்லை, ஒருவகையான எதிர்மறைப் பந்து வீச்சு, ரன் குறைப்பு நெகெட்டிவ் பவுலிங்கே. அதில் ராகுல் ஒரு தவறான ஷாட் ஆடப்போய் பவுல்டு ஆக அது பெரிய பந்து வீச்சாகப் பேசப்படுகிறது. அதுவும் இங்கிலாந்து வர்ணனையாளார்களுக்கு எப்போது மைக் கேட்டிங் ஷேன் வார்னிடம் ‘நூற்றாண்டின் சிறந்தப் பந்தில்’ ஆட்டமிழந்தாரோ அது அவர்களின் மனக்கற்பனைவெளியில் தங்கி விட்டது, அதனால் இங்கிலாந்தில் ஏதாவது பந்து திரும்பி விட்டாலே அது ஷேன் வார்னுடன் ஒப்பிடப்படுவது வழக்கம்.

ரிஷப் பந்த் 29 பந்து டக் அவுட்டிலிருந்து கிரிக்கெட்டைப் புரிந்து கொண்டிருப்பார், ரன்கள் எடுப்பதே பேட்ஸ்மென்கள் பணி என்பதைப் புரிந்து கொண்டார். டீப் மிட்விக்கெட்டில் ரஷீத்தை ஸ்டாண்ட்சுக்கு ரசிகர்கள் மத்தியில் சிக்சருக்குத் தூக்கி அவர் 117 பந்துகளில் அதிரடி சதம் கண்டார். 204 ரன்களை இருவரும் சேர்த்தனர். ஒருமுறை நேதன் ஆஸ்ட்ல் நியூஸிலாந்தில் இது போன்ற பெரிய இலக்கை தனது 152 பந்து இரட்டைச் சதம் மூலம் அச்சுறுத்திய நினைவு வந்தது, ஒன்று ராகுலோ, அல்லது ரிஷப் பந்த்தோ அது போன்ற ஒரு தாக்குதல் ஆட்டம் ஆடுவார்களோ என்ற நப்பாசை ஏற்பட்டது உண்மைதான்.

கூட்டாளியை உடைத்தவுடன் ரிஷப் பந்த் அதுவரை நன்றாகக் கணித்து ஆடியவர் கூக்ளியை சரிவரக் கணிக்காமல் தூக்கி அடிக்க லாங் ஆஃபில் மொயின் அலியிடம் கேட்ச் ஆனது. ஷார்ட் பிட்ச் உத்தி இங்கிலாந்துக்குக் கை கொடுக்கவில்லை. 146 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 டவரிங் சிக்சர்களுடன் 114 ரன்களில் ஆட்டமிழந்த போது மிகவும் வெறுப்படைந்தும், ஏமாற்றத்திலும் வெளியேறினார். இஷாந்த் சர்மா அடில் ரஷீத் ரஃபில் பிட்ச் செய்த பந்தை ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து தைரியம் காட்டினார். 24 பந்துகள் சுற்றிலும் குடை போல் அமைக்கப்பட்ட களவியூகத்துக்கிடையே தைரியம் காட்டினார். கடைசியில் சாம் கரன் பந்து ஒன்று எட்ஜைத் தட்டிச் சென்றது.

முதல் இன்னிங்ஸ் நாயகன் ஜடேஜாவின் மட்டை விளிம்பை சாம் கரன் பந்து முத்தமிட்டு பேர்ஸ்டோ கையில் தஞ்சமடைய, ஆண்டர்சனின் மெக்ரா சாதனை உடைப்புக்கு அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் மொகமது ஷமிக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீசி குச்சியைப் பெயர்க்க, கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகளைக் கடந்து 564 விக்கெட்டுகளுடன் உலகின் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்குச் சொந்தக் காரரானார் ஆண்டர்சன், இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராகுல், பந்த் 121/5 என்ற நிலையில் இணைந்தனர், ஹனுமா விஹாரிக்கு பேய் பவுன்சரை ஸ்டோக்ஸ் வீச எட்ஜ் ஆகி வெளியேறினார். அதன் பிறகு ராகுல், பந்த் சேர்ந்தனர். பிட்ச் மந்தமாக இருந்ததால் ராகுல் வேகப்பந்து வீச்சாளார்களையும் தூக்கித் தூக்கி அடிக்க முடிந்தது. ரிஷப் பந்த் புல் ஷாட்களை கட் ஷாட்களை அபாரமாகப் பயன்படுத்தினார். இங்கிலாந்தில் சதம்டித்த முதல் இந்திய விக்கெட் கீப்பரானார் ரிஷப் பந்த். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல், ரிஷப் பந்த் நிறைய ரன்களைக் குவித்தனர், நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்துக்கு உதறலைக் கொடுத்தனர். இந்தியா 2வது இன்னிங்ஸில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது என்பது தொலைதூர நினைவானது ரிஷப் பந்த், ராகுல் கூட்டணியால்தான். விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி இந்தியப்பக்கம்தான்.

என்னதான் நம்பிக்கை அளித்தாலும் லார்ட்ஸ் டெஸ்ட்டைத் தவிர மற்ற டெஸ்ட் போட்டிகளில் சவால் அளித்தோம் என்றாலும் கடைசியில் இன்னொரு அயல்நாட்டுட் தொடரை 4-1 என்று இந்தியா தோற்றதுதான் நடந்துள்ளது. கோலி கேட்பது போல் எத்தனை நாளைக்குத்தான் நாம் ‘சவால் அளிக்கிறோம்’ ‘முயற்சி செய்தோம்’ என்று கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்? என்றைக்கு வெற்றியுடன் திரும்பப் போகிறோம்?

ஆட்ட நாயகன் அலிஸ்டர் குக், தொடர் நாயகர்கள் சாம் கரன், விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x