Published : 28 Sep 2018 05:05 PM
Last Updated : 28 Sep 2018 05:05 PM

ஐபிஎல் கிரிக்கெட்டா?, இந்திய அணியா? முடிவெடுங்கள் தோனி: விளாசிய கவாஸ்கர்

 

பேட்டிங்கில் இழந்த பார்மை மீட்க தோனி உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமாகக் கவனம் செலுத்தி விளையாட வேண்டும், ஐபிஎல் போட்டிக்குப்பின் தோனியின் பேட்டிங் சரியில்லை என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விளாசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்து, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அதிலும், கடந்த ஐபிஎல் போட்டிக்கு பின் தோனி ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார்.

2 ஆண்டுகள் தடைக்குப் பின் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி பொறுப்பேற்று 16 ஆட்டங்களில் விளையாடி 455 ரன்கள் சேர்த்தார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும். இவரின் சராசரி 75.83 ரன்களாகும். ஆனால், ஒருநாள் போட்டிகளைக் பொருத்தவரை கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம்தேதி இலங்கையுடன் தர்மசலா நகரில் நடந்த போட்டியில் 65 ரன்கள் சேர்த்துள்ளார்.அதன்பின் 16 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி ஒரு போட்டியில்கூட அரை சதம் அடிக்கவில்லை.

இந்த 16 போட்டிகளில் 7 போட்டிகளில் தோனி களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற போதிலும், மீதமுள்ள இந்த 9 போட்டிகளில் அதிகபட்சம் 42 ரன்கள் மட்டும்தான், இந்த 9 ஆட்டங்களில் மொத்தம் 189 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் சராசரி 27 ரன்கள் மட்டும்தான். தோனி, 37, 42, 0, 33, 8 என்ற ரன்கள் சேர்த்துள்ளார்.

மேட்ச்வின்னர் என்று அழைக்கக்கூடிய தோனி சமீபகாலமாக மிக மோசமாக பேட் செய்வதும், ரன் சேர்க்க திணறிவருவதும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், குறைவான ஒருநாள் போட்டிகளே இருப்பதால் பேட்டிங் பார்மையும், ரன் குவிக்கும் திறமையையும் பட்டை தீட்ட வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார்.

இது குறித்து முன்னாள் கேப்டனும், முன்னாள் வீரருமான சுனில் கவாஸ்கர் தோனியை சாடி இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தோனியின் பேட்டிங் ஃபார்ம் கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஒரு நாள் போட்டிகளில் அவரின் ரன் குவிக்கும் வேகம், திறமை மழுங்கி வருகிறது. இங்கிலாந்து தொடரிலும், ஆசியக் கோப்பையிலும் ரசிகர்கள் அவரின் பேட்டிங் திறமையையும், வழக்கமான அதிரடி ஆட்டத்தையும் மிகவும் எதிர்பார்த்தார்கள் ஆனால், அவர் வழக்கத்துக்கு மாறாக விளையாடினார்.

ஐபிஎல் போட்டித் தொடரில் சிறப்பாக பேட் செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்த தோனி, ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்க முடியாதது ஏன். இதில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் ஏனென்றால், உலகக்கோப்பைப் போட்டிக்கு இன்னும் குறுகியகாலமே இருக்கிறது.

இதற்கு முன் இருந்த இந்திய வீரர்கள், மூத்த வீரர்கள் பேட்டிங்கில் ஃபார்ம் குறையும் போது, உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமாக விளையாடுவார்கள். தங்கள் பேட்டிங் திறமையை மெருகேற்றிக்கொண்டார்கள்.

ஆனால், தோனி தனது பேட்டிங் ஃபார்ம் மங்கி இருந்தபோதிலும்கூட அவர் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதில் ஆர்வம்காட்டவில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் தோனி அதிகமாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக 4 நாள் ஆட்டங்களில் அவர்கள் அதிகமாகக் கவனம் செலுத்தி விளையாட வேண்டும். அவ்வாறு தோனி விளையாடும்போது, அவருக்கும் அது உதவியாக இருக்கும், வளர்ந்துவரும் வீரர்கள் தோனியுடன் விளையாடும் போது ஊக்கம் பெறுவார்கள்.

தோனி மற்ற அணிகளுடன் விளையாடுவதைக் காட்டிலும் ஜார்கண்ட் மாநில அணியுடன் இணைந்துவிளையாடினால்தான் இளம் வீரர்களுக்கு இன்னும் உற்சாகத்தையும், தார்மீக நம்பிக்கையையும் அளிக்கும்.

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன. ஆனால், 4 நாள் ஆட்டங்களில் விளையாடும்போது, நீண்ட இன்னிங்ஸை நாம் விளையாட முடியும், பேட்டிங்கில் நிலைத்து ஆடும் திறமையை வளர்த்துக்கொண்டு களத்தில் நின்று விளையாட முடியும். இந்தத் திறமைதான் 50 ஓவர்கள் ஒருநாள் போட்டிக்கு உதவியாக இருக்கும்.

இந்திய அணியில் தோனி 4-வது வீரராகக் களமிறங்கி விளையாடுகிறார். எதிர்வரும் உலகக்கோப்பையை மனதில் வைத்து தோனி தனது பேட்டிங்கில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்.

அதற்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர வேறு எதுவும் வழி இல்லை. உலகக்கோப்பைக்கு இந்தியஅணி தயாராவதற்கு இன்னும் குறைந்த அளவிலான போட்டிகளே இருப்பதால், அதிகமான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தோனி தன்னை தயார்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x