Published : 08 Sep 2014 09:22 PM
Last Updated : 08 Sep 2014 09:22 PM

ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினால் இந்தியாவை நிறுத்த முடியாது: ஷோயப் அக்தர்

இந்தியா உலக சாம்பியன்கள் என்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக வீசுவது முக்கியம் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

"ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை 2015 உலகக் கோப்பைப் போட்டிகளை மனதில் கொண்டு பயிற்சியில் ஈடுபடச்செய்ய வேண்டும். இந்த மூவரும் உடற்தகுதி அளவில் கட்டுக்கோப்புடன் முழுதும் ஃபிட் என்றால், இவர்கள் சிறப்பாக விசினால் இந்திய அணியை யாராலும் நிறுத்த முடியாது.

உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு ஒருமாதம் முன்பாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வு அளிப்பது அவசியம். இவர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி தேவையான ஓய்வு அளித்து முறையான பயிற்சியில் ஈடுபடச்செய்வது அவசியம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர்கள் ஒரு நீண்ட தொடரை உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னால் ஆடினால் நிச்சயம் உலகக் கோப்பை போட்டிகளின் போது இவர்களிடத்தில் ஆர்வமின்மையும் களைப்புமே எஞ்சும்.

எனவே சர்வதேச கிரிக்கெட்டிற்கு வெளியே இவர்களுக்கு பயிற்சி அளித்து மெதுவாக உடற்தகுதியை மேம்படுத்தும் நிலைக்கு கொண்டு வர வேண்டும். உலகக் கோப்பைப் போட்டிகள் தருணத்தில் அவர்கள் உடற்தகுதி 100% இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல் கூடாது. மாறாக உலகக்கோப்பைப் போட்டிகளின் போது அவர்கள் புத்துணர்வுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும்.

ஒருநாள் போட்டிகளின் இறுதி ஓவர்களை வீசுவதில் இந்திய பவுலர்களிடம் முன்னேற்றம் தெரிகிறது. மொகமது ஷமி இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக வீசினார்.

பிரச்சினை என்னவெனில் மிட் ஆனிலோ மிட் ஆஃபிலோ ஒருவர் நின்று கொண்டு இவர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய அணி பந்து வீச்சில் அனுபவசாலிகள் இல்லாதது பெரிய இழப்புதான்.

பந்து வீச்சில் இவர்களுக்கு பாகிஸ்தானிய பவுலர்கள் மனநிலை வேண்டும். என்னிடம் மற்றும் வாசிம் அக்ரமிடம் இந்திய பவுலர்கள் வரும்போது எங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இது மெதுவான ஒரு நடைமுறை, ஆனால் இறுதி ஓவர்களை வீசுவதில் நிச்சயம் ஒரு முன்னேற்றம் தெரிகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், அவர்களிடத்தில் ஸ்விங் உள்ளது. ஆனால் வேகம் இல்லை. எப்போதும் வலைப்பயிற்சியில் புதிதான விஷயங்களை பயிற்சி செய்ய வேண்டும் தன்னிடம் இல்லாத ஒரு புதிய பந்து வீச்சு முறையை கண்டுபிடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.”

இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x