Published : 12 Sep 2018 08:38 AM
Last Updated : 12 Sep 2018 08:38 AM

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாயி ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 13-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயாகா தகஹாஸியை எதிர்த்து விளையாடினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-17, 7-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சிந்து 2-வது சுற்றில் சீனாவின் பாங்ஜி காவோவுடன் மோதுகிறார். 14-ம் நிலை வீராங்கனையான பாங்ஜி காவோ தனது முதல் சுற்றில் 53-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டியை 21-10 21-8 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-13, 21-15 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீரரான சீனாவின் ஹுவாங் யூக்ஸிங்கை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 33 நிமிடங்களில் முடிவடைந்தது. ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் 27-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் வாங் விங் கி வின்சென்டுடன் மோதுகிறார். 13-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாயி 21-18, 21-17 என்ற நேர் செட்டில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தினார். பிரணாயி தனது 2-வது சுற்றில் மற்றொரு இந்தோனேஷிய வீரரான அந்தோணி சீனிசுகாவை சந்திக்கிறார்.

21-ம் நிலை வீரரான இந்தியாவின் சமீர் வர்மா 18-21, 22-20, 10-21 என்ற செட் கணக்கில் 33-ம் நிலை வீரரான கொரியாவின் லீ டோங் கெயினிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 13-21, 17-21 என்ற நேர் செட்டில் சீனாவின் இல்யு வாங், டோங்ப்பிங் ஹுவாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் மற்றொரு இந்திய ஜோடியான பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி 21-9, 21-6 என்ற நேர் செட்டில் மலேசியாவின் மேத்யூ போகார்ட்டி, இஸபெல் ஹாங் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x