Published : 18 Sep 2018 09:40 PM
Last Updated : 18 Sep 2018 09:40 PM

தவண் சதம்; தோனி டக் அவுட்; கடைசி 10 ஒவர்களில் 45 ரன்கள்: இந்தியாவை 285 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது ஹாங்காங்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 40.3 ஓவர்களில் 240/2 என்ற நிலையிலிருந்து அடுத்த 9.3 ஓவர்களில் வெறும் 45 ரன்களையே எடுத்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்களுக்கு ஹாங்காங்கிடம் மட்டுப்பட்டது.

மந்தமான பிட்ச், பந்துகள் மட்டைக்கு மெதுவாக வருகிறது, நீளமான பவுண்டரிகள் ஆசியக் கோப்பைப் போட்டித் தொடரை சுவாரசியமற்றதாக்கியுள்ளது.

அதனால்தான் இன்று ஹாங்காங் டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. ரோஹித் சர்மா 22 பந்துகளில் 23 ரன்களை 4 பவுண்டரிகளுடன் எடுத்து ஹாங்காங்கின் அருமையான திட்டத்துக்கு விழுந்தார்.

லெக் திசையில் ஏற்கெனவே 3 ஸ்லாக்குகள் மாட்டவில்லை. இதைப்பயன்படுத்தி ஆஃப் பிரேக் பவுலர் இசான் கான் லெக் திசையில் கொஞ்சம் காலியாக விட்டு பந்தை தூக்கி வீசினார், இறங்கி வந்து ஆடிய ரோஹித் சர்மா அந்த கள இடைவெளியை ஆன் திசையில் பயன்படுத்த நினைத்தார், ஆனால் பந்து அவரது மட்டையின் ரீச்சுக்கு வரவில்லை முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் கொடியேற்றி வெளியேறினார்.

45/1 என்ற நிலைக்குப் பிறகு ராயுடு, தவண் கூட்டிணைந்து 116 ரன்களை 22 ஓவர்களில் சேர்த்தனர், ராயுடு 70 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத நிலையில் இசான் நவாஸ் பவுன்சரை அப்பர் கட் செய்ய முயன்று கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு ஷிகர் தவணும், கார்த்திக்கும் இணைந்து ஸ்கோரை 11.2 ஓவர்களில் 161/2லிருந்து 240 ரன்களுக்கு உயர்த்தினர். ஷிகர் தவண் தனது 14வது ஒருநாள் சதத்தை 105 பந்துகளில் எடுத்து அதன் பிறகு 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடித்து 120 பந்துகளில் 15 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 127 ரன்களில் ஆட்டமிழந்த போது இந்திய அணி 40.4 ஓவர்களில் 240/3.

தோனி இறங்கினார் 3 பந்துகள் ஆடினார். ஆப் பிரேக் பவுலர் இசான் கான் பந்தை எட்ஜ் செய்து டக் அவுட் ஆகி வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆகி தோனியைப் பெவிலியனுக்குப் பின் தொடர்ந்தார்.

கேதார் ஜாதவ் மட்டுமே நிலைத்து ஆடி 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். புவனேஷ்வர் குமார் 9 ரன்களிலும் ஷர்துல் தாக்குர் டக்கிலும் வெளியேற இந்திய அணி 240/2 என்ற நிலையிலிருந்து 50 ஓவர்களில் 285/7 என்று முடிந்தது.

ஹாங்காங் தரப்பில் கே.டி.ஷாஅ 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இசான் கான் 2 விக்கெட்டுகளையும் இசான் நவாஸ் மற்றும் அய்ஜாஜ் கான் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஹாங்காங் தற்போது விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x