Published : 10 Sep 2018 05:51 PM
Last Updated : 10 Sep 2018 05:51 PM

பும்ரா ஓவர் த்ரோ; நிற்காத கைதட்டல்; முதல் டெஸ்ட்டிலும் சதம், கடைசி டெஸ்டிலும் சதம்: அலிஸ்டர் குக் சாதனை

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இங்கிலாந்தின் ‘எவர்க்ரீன்’ பேட்டிங் லெஜண்ட் அலிஸ்டர் குக் சதம் எடுத்தார். அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும் இது, இதில் தன் கடைசி இன்னிங்ஸில் சதம் எடுத்தார் அலிஸ்டர் குக்.

தன் கடைசி டெஸ்ட்டில் சதம் அடிக்கும் 5வது வீரர் அலிஸ்டர் குக்.

இத்துடன் 33 சதங்கள் என்று குக்கின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது. அவர் 101 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வருகிறார்.

2வது இன்னிங்சின் 70வது ஓவரை ஜடேஜா வீச  96 ரன்களில் இருந்த அலிஸ்டர் குக் சிங்கிளுக்குத்தான் பந்தைத் தட்டி விட்டார், ஆனால் பும்ரா பந்தை எடுத்து அடித்த த்ரோவை கவர் செய்ய ஆளில்லை மொத்தம் 5 ரன்கள் ஆனது, குக் 101 ரன்கள் என்று மட்டையை உயர்த்தினார், கைதட்டல் மைதானம் நெடுக இன்னமும் அடங்கவில்லை.

2006ம் ஆண்டு மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை நடைபெற்ற நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அலிஸ்டர் குக் முதல் இன்னிங்சில் 60 ரன்கள் என்று அரைசதம் எடுத்தார், 2வது இன்னிங்சில் 104 நாட் அவுட்.

அதே போல் இன்று இதே இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் அரைசதம் கண்ட அலிஸ்டர் குக் 2வது இன்னிங்ஸில் சதம் கண்டார். இது ஒரு தனிச்சிறப்பான சாதனையாக இருக்கும். ஏனெனில் ஒரே அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலும் அரைசதம் பிறகு சதம், கடைசி டெஸ்ட் போட்டியிலும் அரைசதம் மற்றும் சதம்.

இதே இன்னிங்ஸில் அலிஸ்டர் குக், சங்கக்காராவின் 12,400 டெஸ்ட் ரன்களைக் கடந்து சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார். 210 பந்துகளில் சதம் கண்ட குக் 8 பவுண்டரிகளுடன் தற்போது 103 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். இவருடன் ஜோ ரூட் 92 ரன்களுடன் ஆடிவருகிறார்.

இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 8 விக்கெட்டுகள் மீதமிருக்க 283 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x