Published : 24 Sep 2018 05:02 PM
Last Updated : 24 Sep 2018 05:02 PM

மொயின் அலியின் ஆஸி.வீரர் மீதான ‘ஒசாமா’ வசை புகார் புஸ்...: ஆதாரம் இல்லையென கிரிக்கெட் ஆஸி. கைவிரிப்பு

2015 ஆஷஸ் தொடரின் போது ஆஸி. வீரர் ஒருவர் தன்னை ‘ஒசாமா’ என்று பின்லேடனைக் குறிப்பிடுமாறு கூறி நிறவெறி வசை செய்ததாக இங்கிலாந்தின் மொயின் அலி எழுப்பிய புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் விசாரணையில் முடிவுக்கு வந்துள்ளது.

தன்னுடைய புதிய நூலின் ஒரு பகுதியில் மொயின் அலி 2015ம் ஆண்டு கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ஒசாமா என்று பயங்கரவாதியின் பெயரைக் குறிப்பிட்டு நிறவெறி வசை செய்ததாக எழுதியிருந்தார்.

இதனையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது, யார் அப்படிக் கூறியிருந்தாலும் நடவடிக்கை பாயும்... இதோ விசாரணை என்றெல்லாம் சூளுரைத்தது நினைவிருக்கலாம்.

இதனையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நேர்மைக்குழு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரை விசாரித்து கார்டிப் டெஸ்ட்டில் நடந்தது என்ன என்பதைப் பற்றி கேட்டறிந்தனர். இதன் விசாரணை வார இறுதியில் முடிந்தது.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டது. இதன் முடிவையும் மொயினிடம் தெரிவித்தோம். மொயீனும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை. மேலும் புதிய விசாரணைகளில் அவரது புகாருக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது.

ஆனால் இம்மாதிரி நிறவெறிப்போக்குக்கு இங்கு சமூகத்திலும் இடமில்லை, கிரிக்கெட்டிலும் இடமில்லை, இதனை சிறிதளவும் பொறுத்துக் கொள்ள முடியாது. நாட்டை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எந்தத் துறையினராக இருந்தாலும் உயர்தர நடத்தைகளையும் மதிப்பீடுகளையும் கொண்டிருக்க வேண்டும். இதில் அவர்கள் தவறினால் விளைவுகள் என்னவென்பதையும் வீரர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றார்.

மொயின் அலியும், “இதனை நான் புகாராக எழுப்பியது உண்மைதான், ஆனால் இனி இதனை பெரிதாக கொண்டு செல்ல விரும்பவில்லை, அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். பெரிய விஷயம் ஒன்றுமில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது, கடுமையாக போராடி இரு அணிகளும் ஆடிய தொடர். களத்தில் நடந்ததை ரிப்போர்ட் செய்தேன் அவ்வளவே” என்று கூறியுள்ளார்.

அப்போதே லீ மேன் தன் வீரர்களிடம் ‘ஒசாமா’ என்று கூறினீர்களா என்று கேட்ட போது, பார்ட் டைமர் என்று கூறியதாக வீரர் ஒருவர் தெரிவித்த செய்தி வெளிவந்தது. ஆனால் மொயின் அலி ‘ஒசாமா’ என்ற வார்த்தைக்கும், ‘பார்ட்டைமர் என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியாமலா புகார் எழுப்புவேன் என்றார்.

ஆனால் இப்போது இந்தவிவகாரம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x