Published : 12 Sep 2018 11:38 AM
Last Updated : 12 Sep 2018 11:38 AM

தோனி உட்பட எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத தனிச்சிறப்பு: ரிஷப் பந்த் சாதனை

ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது அனைத்து அதிரடி மற்றும் நிதானத் திறமைகளைக் காட்டி ஆடிய ரிஷப் பந்த் 117 பந்துகளில் சதம் அடித்தார், அதுவும் பம்மிக்கொண்டிருக்காமல் அடில் ரஷீத்தை தூக்கி ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடித்து ராஜா போல் சதம் கண்டார்.

இங்கிலாந்தை இவரும் ராகுலும் சேர்ந்து 204ரன்கள் கூட்டணி  அமைத்து உதறலெடுக்க வைத்தனர், ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்க இங்கிலாந்து ஸ்லிப் இல்லாமல் வீச நேரிட்டது. அடில் ரஷீத்தை சிக்சர்களாக அவர் வெளுத்தாலும் பென் ஸ்டோக்ஸின் ஷார்ட் பிட்ச் உத்திக்கும் தயாராகவே இருந்து தைரியம் காட்டினார்.

கடைசியில் அடில் ரஷீத்தை சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் டீப்பில் கேட்ச் ஆனது இந்திய அணியின் ட்ரா வாய்ப்பை பறித்தது.

இந்நிலையில் நேற்றைய ஓவல் சதத்தின் மூலம் ஒரு தனிச்சிறப்பான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பரூக் இஞ்ஜினியர் முதல் தோனி ஈறாக கிர்மானி, கிரன் மோர் என்று எந்த இந்திய விக்கெட் கீப்பரும் செய்யாத ஒரு சாதனையை தன் சதத்தின் மூலம் செய்துள்ளார் ரிஷப் பந்த்.

இங்கிலாந்தில் டெஸட் கிரிக்கெட்டில் சதம் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் என்ற சாதனையே அது.

இதனைப் பாராட்டி ஐசிசி அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், “முதல் டெஸ்ட் சதத்தை அடித்ததற்கு வாழ்த்துக்கள் பந்த், மிக ஸ்டைலாக சிக்சரில் சதம்” என்று பாராட்டியதோடு, “இங்கிலாந்தில் சதம் எடுக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர்” என்று ரிஷப் பந்த் சாதனையை அங்கீகரித்துள்ளது.

ஓவலில் 4வது இன்னிங்சில் சதமடித்த இந்திய தொடக்க வீரர்களில் சுனில் கவாஸ்கருக்குப் பிறகு ராகுல் இணைந்துள்ளார், 1979 தொடரில் இதே ஓவைலில் சுனில் கவாஸ்கர் 438 ரன்கள் இலக்கை விரட்டும்போது 221 ரன்கள் விளாசியதை யாரால் மறக்கமுடியும். இதே போட்டியில் 213 ரன்கள் தொடக்கக் கூட்டணியை கவாஸ்கருடன் சேர்ந்து அமைத்த சேத்தன் சவுகான் 80 ரன்கள் எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x