Published : 18 Sep 2018 08:58 AM
Last Updated : 18 Sep 2018 08:58 AM

கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் நடித்த விழிப்புணர்வு குறும்படம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்

கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் நடித்த விழிப்புணர்வு குறும்படத்தின் சிடியை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெளியிட்டார்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. குறும்படத்தின் முதல் பிரதியை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெளியிட, நடிகர் விக்ரம் பெற்றுக்கொண்டார்.

உண்மைத் தன்மையை அறிய...

விழாவில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேசும்போது, “கண்காணிப்பு கேமராக்கள் சென்னையின் பாதுகாப்புக்கு அவசியம். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.

பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரிதும் உதவுகின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் சென்னையை கண்காணிப்பு கேமராக்களின் வளையத்துக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம்.

பாதுகாப்புக்கான மூலதனம்

ஆனால் அதற்கான வேகம் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரவில்லை. இதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். கண்காணிப்பு கேமரா என்பது நமது பாதுகாப்புக்கான ஒரு மூலதனம்” என்றார்.

நடிகர் விக்ரம் பேசும்போது, “குற்றங்களைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் முக்கிய கருவியாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைப்பது காலத்தின் கட்டாயம். சிங்கப்பூரில் ஒரு பெண் இரவில் தனியாக செல்ல முடியும். அந்த அளவுக்கு அவர்களின் பாதுகாப்பு உள்ளது. அதேபோல் சென்னையையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால், ஆர்.தினகரன், எம்.டி.கணேசமூர்த்தி, மாநில குற்ற ஆவணக்காப்பக காவல்துறைத் தலைவர் எம்.சி.சாரங்கன், இணை ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆர் சுதாகர், டி.எஸ்.அன்பு, சி.மகேஸ்வரி, பி.விஜயகுமாரி, ஏ.ஜி.பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x