Last Updated : 25 Sep, 2018 06:23 PM

 

Published : 25 Sep 2018 06:23 PM
Last Updated : 25 Sep 2018 06:23 PM

எல்லாம் விதிப்படி தான் நடக்கும்; நம்பர் பெரிய விஷயமல்ல அலட்டிக் கொள்ளாமல் கூறிய தோனி

நான் கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்படும்போது, நம்பர் ஒரு பெரிய விஷயமல்ல என்று 200-வது போட்டியில் கேப்டன் பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடந்துவரும் சூப்பர்-4 போட்டியில், 696 நாட்களுக்குப் பின் இந்திய அணிக்கு கேப்டனாக தோனி பொறுப்பேற்றுள்ளார். கேப்டனாக பொறுப்பேற்று செயல்படுவது இது அவருக்கு 200-வது போட்டியாகும்.

ஆசியக் கோப்பையில் இந்திய அணி ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிட்டதால், ஆப்கானிஸ்தானுடன் இன்றைய முக்கியத்துவமில்லாத ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனால், ஆசியக் கோப்பைக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவணுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கேப்டன்ஷிப்பில் தோனிக்கு 200-வது ஆட்டமாக இருப்பது குறித்து வர்ணனையாளர் தோனியிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் கூறுகையில், "எத்தனைப் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்றேன், எந்த நம்பரில் இருக்கிறேன் என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. அது குறித்து தெரியாது. ஆனால், கேப்டன் பொறுப்பு கொடுக்கும் போது நீங்கள் 199 போட்டிகளில் கேப்டனாக இருந்துவிட்டீர்கள், இது 200-வது போட்டி என்றார்கள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும், அதில்தான் எப்போதும் நம்பிக்கை கொண்டவன்.

கேப்டன்ஷிப் என்னிடம் இருந்து போன பின், எதுவுமே என் கைகளில் இல்லை, நான் கட்டுப்படுத்தவும் இல்லை. 200 போட்டிகளில் நான் கேப்டனாக பொறுப்பேற்றது நல்லதுதான். என்னைப் பொறுத்தவரை நம்பர் பெரிய விஷயமல்ல" என்று தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த சுனில் கவாஸ்கர், “ 100 சதவீதம் தோனி தான் நாட்டின் புகழ்பெற்ற கேப்டன் சந்தேகமே இல்லை” எனத் தெரிவித்தார்.

கேப்டன் பொறுப்பில் மைல்கல் பற்றியும், போட்டிகளில் எண்ணிக்கை பற்றியும் கவலைப்படாதவர் தோனி. டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளை நிறைவு செய்ய இன்னும் 10 போட்டிகள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 90 போட்டிகளிலேயே தனது ஓய்வை அறிவித்தவர் தோனி. இதே வேறு ஒரு வீரராக இருந்தால், இன்னும் 10 போட்டிகள்தானே முடித்துவிட்டு ஓய்வை அறிவிக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பார்கள். ஆதலால் தோனி எப்போதுமே எண்ணிக்கை பற்றி கவலைப்படாதவர்.

கேப்டன் பதவியை ராஜினாமா செய்து 696 நாட்களுக்குப் பின் மீண்டும் தோனி இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்புடன் களத்தில் இறங்கியது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் இருந்தது.

அதுமட்டுமல்லாமல், தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் 200-வது போட்டியாகும். மேலும் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, தவண், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

தோனி இதுவரை 199 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ளார். அதில் 110 போட்டிகளில் இந்திய அணி வெற்றியும், 74 தோல்விகளும் அடைந்தது. 4 போட்டி டை ஆகவும், 11 போட்டிகள் முடிவு இல்லாமல் நின்றது. ஒட்டுமொத்தத்தில் தோனியின் கேப்டன்ஷிப்பில் வெற்றியின் வகிதம் 55.28 சதவீதமாகும்

அதற்குப் பதிலாக ராகுல், கலில் அகமது, மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல் ஆகியோருக்குவாய்ப்பு அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x