

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி கேப்டன் பதவியை கோலிக்கு வழங்கியது ஏன் என்பதற்குப் பதில் அளித்திருக்கிறார்.
கேப்டன் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு கோப்பைகளை இந்திய கிரிக்கெட் அணிக்கு பெற்றுத் தந்தவர். கடந்த 2014-ல் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்ற இவர், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் 20 - 20 போட்டிகளிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
தோனி மீது அணி நிர்வாகம் செலுத்திய அழுத்தத்தின் காரணமாகவே அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் இது குறித்துப் பதிலளிக்காமல் இருந்து வந்தார் தோனி.
இந்த நிலையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி இது குறித்து தனது பதிலை தெரிவித்திருக்கிறார்.
"2019 உலகக் கோப்பையை எதிர்கொள்ள புதிய கேப்டனுக்குபோதிய கால அவகாசம் வேண்டும் என்று நினைத்தேன். புதிய கேப்டனுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் சக்திவாய்ந்த அணியை உருவாக்குவது சாத்தியமற்றது. நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு சரியான நேரம் இது என்று நினைத்தே விலகினேன்” என்றார்.
மேலும் போதிய பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காமல் இருந்ததுதான் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தோல்விக்குக் காரணம் என்று தோனி கூறினார்.
சுமார் 199 ஆட்டங்களில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த தோனி, 110 போட்டிகளில் வெற்றியும், 74 போட்டிகளில் தோல்வியும் பெற்று இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.