Last Updated : 12 Sep, 2014 05:42 PM

 

Published : 12 Sep 2014 05:42 PM
Last Updated : 12 Sep 2014 05:42 PM

பட்டாசு விபத்துகளைத் தடுக்கும் பயிற்சியும் விழிப்புணர்வும்

விருதுநகர் மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக திகழ்வது பட்டாசுத் தொழில். சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகளில் மட்டுமே பட்டாசு வெடிக்கும் பழக்கம் மாறி, இன்று கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

பட்டாசு உற்பத்தித் தொழிலில் நேரடியாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்க ளும், அச்சகம், போக்குவரத்து மற்றும் சுமைப் பணித் தொழிலாளர்கள், வியாபாரிகள் என 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புபெற்று வருகின்றனர். ஆனால், பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பட்டாசு உற்பத்தித் தொழிலில் சிலரின் அலட்சியத் தாலும், கவனக்குறைவான நடவடிக்கைகளாலும் அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலிகளும் ஏற்படுகின்றன.

பட்டாசுத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மூலப் பொருட்களான ரசாயனங்கள் தொடர்பாக முழுமையாக அறியாதிருத்தல், ரசாயனங்களை கையாளுவதில் உள்ள அறியாமை போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுவதால், பட்டாசுத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பயிற்சியளிக்க திட்டமிட்டு, தமிழ்நாடு தொழிலக சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை யோடு இணைந்து சிவகாசி யிலுள்ள ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் வேதியியல்துறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.அழகப்பன் கூறியதாவது: பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பும், விழிப்புணர்வும் மிக முக்கியம். எனவே, தமிழ்நாடு தொழிலக சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறையோடு இணைந்து பட்டாசுத் தொழிலாளர்கள், போர்மேன்கள், மேலாளர்கள் மற்றும் பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு 40 நாள் பயிற்சியளிக்கிறோம். இதில், வேதிப் பொருட்களின் ரசாயன குணங்கள், அவைகளை கையாளும் போது ஏற்படும் வேதி வினைகள், விபத்துக்கான காரணங்கள் குறித்து விளக்கமளிக்கப்படுகின்றன.

மேலும், பட்டாசுத் தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களை சேமிக்கும் இடம், மருந்துகள் கலத்தல், ஒன்று சேர்த்தல், காயவைத்தல் போன்றவைகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், சோதனைக் கூடத்தில் மூலப்பொருட்களின் சுத்தத் தன்மை, அமிலம், காரம், குளோரைடு ஆகிய உப்புகள் இருப்பதால் ஏற்படும் வினைகளும் அதனால் ஏற்படக்கூடிய விபத்துகள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் தொழிலக பாதுகாப்புத்துறை யினர் சார்பில் இணை இயக்குநர் பாலகிருஷ்ணன், துணை இயக்குநர் சித்தார்த்தன் ஆகியோரால் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதில், பாதுகாப்பு விதிமுறைகளை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தப்படும். 15 குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் 30 முதல் 40 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு 80 சதவீத வருகைப் பதிவு அவசியம். 40 நாட்கள் பயிற்சியைத் தொடர்ந்து 3 தேர்வுகள் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுபோன்ற பயிற்சியும், தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வும் பட்டாசு விபத்துகளைத் தடுக்கும் என்றார்.

கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

பட்டாசுத் தொழிற்சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில்சாலை சட்டப் பிரிவு 1884- 4ல் கூறப்பட்டுள்ளன. ஜன்னல்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும். தரையில் 3 மி.மீட்டர் தடிமனுள்ள ரப்பர் ஷீட் விரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு கட்டிடத்துக்கும் மற்றொரு கட்டிடத்துக்கும் இடையே குறைந்தபட்சம் 18 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்துக்குள் 50 கிலோ எடைக்கு மேல் வெடி மருந்துப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெடி மருந்து திரி வெட்டுவதற்கு இரும்பிலான கத்திரிகள், பிளேடுகளை பயன்படுத்தக் கூடாது.

திரிகளை தரையில் வைத்து வெட்டக் கூடாது. திரிவெட்டும் பணியில் பெண்களை ஈடுபடுத்தக் கூடாது. திரிகளை மண்ணில் படும்படி உலர்த்தக் கூடாது. அதுமட்டுமின்றி, பட்டாசு ரகங்களை உலர்மேடை அல்லாத வேறு இடங்களில் காயவைக்கக் கூடாது. செல்போன்களை தொழிற்சாலைக்குள் கொண்டுசெல்லக் கூடாது. செய்து முடிக்கப்பட்ட பட்டாசு ரகங்களை உற்பத்தி அறைகளில் வைக்கக் கூடாது, தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட ஏராளமான விதிமுறைகளை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x