Published : 02 Jun 2019 02:52 PM
Last Updated : 02 Jun 2019 02:52 PM

இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டிக்கு ‘உலக சாதனை’பிட்ச்

இங்கிலாந்து உலகக்கோப்பை ரன் மழையாக இருக்கும், 500 ரன்களை ஒரு இன்னிங்சில் விளாசுவார்கள் என்றெல்லாம் பில்ட் அப் கொடுக்கப்பட்டது இதுவரை முடிந்த 4 போட்டிகளில் அதன் தடயம் கூடத் தெரியவில்லை.

 

இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா போட்டி மட்டும்தான் 300 ரன்களுக்கும் மேல் சென்றது.  மற்ற போட்டிகளில் பாகிஸ்தான் -மே.இ.தீவுகள் போட்டி 35 ஓவர்களில் மே.இ.தீவுகள் வெற்றியிலும் நியூசிலாந்து, இலங்கை போட்டி 45 ஓவர்களிலும் முடிவுற்றது. இதனால் இந்த உலகக்கோப்பை இன்னும் ரசிகர்கள் மத்தியில் எழுச்சி பெறவில்லை.

 

இந்நிலையில் திங்களன்று நாட்டிங்காமில் நடைபெறும் பாகிஸ்தான் - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டியை உலக சாதனை நிகழ்த்தப்பட்ட அதே பிட்சில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்த அதே பிட்ச் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் பயன்படுத்தப்படுகிறது. இதே பிட்சில்தான் 2016-ல் இங்கிலாந்த் 444/3 என்று விளாசியது நினைவிருக்கலாம்.

 

அன்று பாகிஸ்தானை மே.இ.தீவுகள் பவுன்ஸ் அவுட் செய்து 105 ரன்களுக்குச் சுருட்டிய பிட்சிற்கு 2 பிட்ச்கள் தள்ளியிருக்கும் பிட்சை இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டிக்குப் பயன் படுத்தி ரசிகர்களைக் குஷிப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

 

பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய அணிகள் வேகப்பந்து வீச்சுக்கு அம்பலமாகிவிட்டது, அடுத்து பாக்கி உள்ள அணி இந்தியா மட்டுமே, அந்த அணியும் பயிற்சியாட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வேகப்பந்து ஆடுகளத்தில் 179 ரன்களுக்குச் சுருண்டது.

 

ஆகவே பிட்ச்கள் பற்றிய பிரச்சினைகள் இப்போதே உலகக்கோப்பையில் பேசத்தொடங்கப்பட்டு விட்டன. ஏன் ஒரு உலகக்கோப்பை பவுலர்கள் உலகக்கோப்பையாக இருந்தால் என்ன கெட்டு விடப்போகிறது? என்பதே சீரியஸ் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

 

சொத்தப் பிட்களில் உலகின் நல்ல பவுலர்களையெல்லாம் அதிகம் அறியப்படாத பேட்ஸ்மென்களெல்லாம் சாத்துமுறை தொடுக்கும் போது ஒரு உலகக்கோப்பையில் அதிகம் அறியப்படாத பவுலர்கள் கோலி, ஸ்மித், வார்னர், ஜோ ரூட், பட்லர், பேர்ஸ்டோ, கெய்ல் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மென்களைத் திணறச் செய்வதாக இருந்தால் என்ன இன்னும் சுவாரஸ்யம்தானே அதிகரிக்கும்!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x