Last Updated : 22 Jun, 2019 12:17 PM

 

Published : 22 Jun 2019 12:17 PM
Last Updated : 22 Jun 2019 12:17 PM

ரஸல் இல்லை; எங்களின் அரையிறுதிவாய்ப்பு முடிந்துவிடவில்லை: ஹோல்டர் நம்பிக்கை

எங்களின் அரையிறுதிவாய்ப்பு முடிந்துவிடவில்லை, நாங்கள் தகுதிபெறுவோம் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி மழையாலும் ரத்தானது. 3 புள்ளிகிளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில் வலிமையான நியூஸிலாந்து அணியைச் சந்திக்கிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

இந்த போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி அடையும் பட்சத்தில் அரையிறு வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிடும்.

இந்நிலையில், போட்டிக்கு முன்பாக மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ஹோல்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

எங்களின் அரையிறுதிவாய்ப்பு முடிந்துவிட்டதாக நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். பயிற்சிப் போட்டியில் எளிதாகத் தோற்கடித்தோம். அதேபோன்று நாங்கள் விளையாடுவோம்.

ஆதலால், அரையிறுதிக்கான வாய்ப்பு எங்களுக்கு முடிந்துவிடவில்லை என்றே நாங்கள் நம்புகிறோம். அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் அணுகுமுறை தெரியும்

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஆனால், இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரஸல் இடம் பெறதாதது வருத்தம்தான். ஆனால், அவர் இல்லாத இடத்தை நாங்கள் சரிசெய்ய முயல்வோம்.

ரஸலுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும முழுமையாக குணமாகவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் உடல்நலத்துடன் இருக்கிறார்கள். கடந்த கால தோல்விகள் குறித்து விரிவாக 2 நாட்கள் கலந்தாய்வு செய்தோம். இந்த கலந்தாய்வுகளின் வெளிப்பாடு நிச்சயம் ஆட்டத்தில் தெரியும்.

இவ்வாறு ஹோல்டர் தெரிவித்தார்.

உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக நடந்த பயிற்சி ஆட்டத்தில், நியூஸிலாந்து அணிக்கு எதிராக 421 ரன்கள் குவித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x