Last Updated : 19 Jun, 2019 12:53 PM

 

Published : 19 Jun 2019 12:53 PM
Last Updated : 19 Jun 2019 12:53 PM

மோசமான பந்துவீச்சு; ரஷித்கானை கிண்டல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர்கள் ஆதரவு

ஐசிசி தரவரிசையில் டி20, ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் நேற்றைய ஆட்டத்தில் மிகமோசான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

ரஷித்கானைக் கிண்டல் செய்து ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி ட்வீட் செய்த நிலையில், அவருக்கு இங்கிலாந்து வீரர்கள்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனது லெக் ஸ்பின்னால் உலக அணிகளுக்கு சவாலாக விளங்கி வந்த ரஷித்கான், ஐபிஎல் போட்டியிலும் குறிப்பிடத்தக்க பந்துவீச்சாளராக இருந்தார். இதனால் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 5 போட்டிகளிலும் ரஷித்கான் பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் அளிக்கவில்லை, விக்கெட்டும் பெரிதாக எடுக்கவில்லை.

உலகக்கோப்பை போட்டியில் மான்செஸ்டர் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மோதியது. இதில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் சேர்த்தது. 398 இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்இழப்புக்கு 248 ரன்களில் ஆட்டமிழந்தது.  

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இந்த லீக் ஆட்டத்தில் ரஷித்கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சு என்ற பெயரைப் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மட்டும் ரஷித்கான் ஓவரில் 11 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதில் 7 சிக்ஸர்கள் மோர்கனால் மட்டுமே அடிக்கப்பட்டது.

இதுபோன்ற மோசமான பந்துவீச்சை உலகக்கோப்பையில் இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு நியூஸிலாந்து வீரர் மார்டின் ஸ்னீடன் வைத்திருந்தார். இதன்பின் இப்போது ரஷித்கான் சொந்தக்காரராகிவிட்டார்.

மேலும், ரஷித்கான் தவிர்த்து, ஒருநாள் தொடரில் அதிகமான ரன்களை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வகாப் ரியாஸ் விட்டுக்கொடுத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 10  ஓவர்களில் 110 ரன்களை வகாப் ரியாஸ் விட்டுக்கொடுத்தார்.

ரஷித்கானை கிண்டல் செய்து ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி வெளியிட்ட ட்வீட்டில் " உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித்கான் சதம் அடித்துவிட்டார் என்பதை இப்போதுதான் கேள்விப்பட்டோம். வாவ்.. 56 பந்துகளில் 110 ரன்களா.. ஒருபந்துவீச்சாளர் குறைந்த பந்துகளில் உலகக்கோப்பையில் சதம் அடித்துள்ளார். நல்ல பேட்செய்யுங்கள் ரஷித்கான்" எனத் தெரிவித்தது.

இந்த ட்வீட்டுக்கு இங்கிலாந்து வீரர்கள் லூக் ரைட், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து லூக் ரைட் ட்விட்டரில் கூறுகையில், "முட்டாள்தனமான ட்வீட். இதை விளையாட்டாக எடுக்க முயற்சிக்க வேண்டும், கிரிக்கெட்டில் ஒருவரின் பங்களிப்பை மதிப்பதற்கு பதிலாக இப்படியா சகவீரர்கள் நடந்து கொள்வது" எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேஸன் கில்லஸ்பியும், ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியின் ட்விட் ரஷித் கான் குறித்த மரியாதை குறைவானது என்று கண்டித்துள்ளார்.

ஸ்டூவர்ட்  பிராட் ட்விட்டில் "ரஷித்கான் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவரின் பந்துவீச்சைப் பார்ப்பதே அலாதியாக இருக்கும். விளையாட்டில் ஒவ்வொருவருக்கும் மோசமான நாட்கள் இருக்கத்தான் செய்யும். இதை பெரிதாக எடுக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x