Published : 24 Jun 2019 08:20 PM
Last Updated : 24 Jun 2019 08:20 PM

ஐபிஎல் தொடரில் ரபாடா விளையாட வேண்டாம் என்று எவ்வளவோ முயற்சித்தோம் பயனில்லை: தெ. ஆ. கேப்டன் டுப்ளெசிஸ் வருத்தம்

2019 ஐபிஎல் தொடருக்குச் செல்ல வேண்டாம் என்று தென் ஆப்பிரிக்கா எவ்வளவோ முயன்றது, ஆனால் ரபாடா சென்று ஆடினார் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாப் டுப்ளெசிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

 

நடப்பு உலகக்கோப்பையில் படுதோல்விகளைச் சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது தென் ஆப்பிரிக்கா, இது போன்ற மோசமான உலகக்கோப்பை அந்த அணிக்கு வாய்த்ததில்லை. அவமானத்தின் விளிம்புக்கே சென்று விட்டோம் என்று கேப்டன் டுபிளெசிஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மூன்று வடிவங்களிலும் ஆடும் சில வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டும் அது பயனளிக்காமல் போனது என்று அவர் வருந்தியுள்ளார். கடந்த ஆண்டு தொடங்கியது முதல் நேதன் லயனுக்குப் பிறகு அதிக ஓவர்களை வீசிய வீரராக திகழ்கிறார் ரபாடா, இது அவரது உத்வேகத்தை உலகக்கோப்பையில் குறைக்க அவர் இந்த உலகக்கோப்பையில் சரிவர வீச முடியாமல் 50.83 என்ற சராசரியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

இந்நிலையில் டுப்ளெசிஸ் கூறியதாவது:

 

ரபாடா பொறுத்தவரையில் எங்களிடம் தெளிவான விடைகள், இல்லை அவர் அதிகமான கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆடினார். ஆனால் நாங்கள் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குச் செல்லாமல் இருக்க எவ்வளவோ முயன்றோம், இதன் மூலம் அவர் உலகக்கோப்பைத் தொடருக்கு பிரஷ் ஆக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை, அவர் ஐபிஎல் ஆடச் சென்றார்.

 

சரி சென்று விட்டார், ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலாவது அவரை இங்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினோம் அவரை மட்டுமல்ல இன்னும் ஒரு சில வீரர்களைக் கூட பாதியில் திருப்பி அழைக்க நினைத்தோம். அதாவது நான் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே இதைப் பற்றி பேசினேன். அதாவது நம் 3 வடிவ கிரிக்கெட் வீரர்களுக்கும் போதிய ஓய்வு கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன். ஏனெனில் இவர்கள் அனைத்து வடிவங்களிலும் எப்போதும் ஆடுகின்றனர், இதோடு ஐபிஎல் வேறு சேர்ந்து கொண்டது. ஆகவே சில வீரர்களுக்கு ஓய்வு அவசியம்.

 

எனவே அவர்கள் உலகக்கோப்பைக்கு புத்துணர்வுடன் வரவில்லை என்று கூறவில்லை. இது சாக்குப் போக்கல்ல, இதுதான் உண்மை.  சரி சர்வதேச தொடர்களிலாவது அவருக்கு ஓய்வு அளித்திருக்கலாமே என்று கேட்கலாம் ஆனால் அவர் மிகப்பெரிய வீரர் தேசிய அணி விளையாடும் போது அவரிடம் போய், ‘அடுத்த 2 தொடர்களுக்கு உனக்கு ஓய்வு’ என்றெல்லாம் கூற முடியாது. அது மிகமிகக் கடினம். ஏனெனில் அவர் பெரிய வீரர். ரொடேஷன் சிஸ்டம் இருக்க வேண்டும்.

 

அதனால்தான் ஆன்ரிச் நோர்ட்டியேவைக் கொண்டு வந்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வரும் காயமடைந்தார். எனவே எங்கள் வேகப்பந்து வீச்சு போய் விட்டது, ஆகவே ரபாடா மீது ஏகப்பட்ட அழுத்தமும், சுமையும் பொறுப்பும் விழுந்தது.

 

ரபாடா தற்போது உணர்கிறார், ஏதாவது செய்ய வேண்டும் என்று. ஆனால் அவருக்கு அது நிகழவில்லை. அதனால்தான் அவரிடம் பவுலிங்கில் தீவிரம் இருக்கவில்லை.

 

ரபாடா தன் வாழ்நாளில் ஆடும்போதெல்லாம் அவர் உயந்து கொண்டேதான் சென்றார், இந்த உலகக்கோப்பைதான் அவரது உயர்வுக்கு ஒரு தடையாக மாறியது. இப்போது அவர்தான் இன்னும் வளர இன்னும் உயரே செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும்.

 

இவ்வாறு கூறினார் டுப்ளெசிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x