மிகப்பெரிய மைல்கல் நோக்கி விராட்கோலி: சச்சின், லாரா சாதனையை முறியடிப்பாரா?

மிகப்பெரிய மைல்கல் நோக்கி விராட்கோலி: சச்சின், லாரா சாதனையை முறியடிப்பாரா?
Updated on
1 min read

உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி இன்று மோத உள்ள லீக் ஆட்டத்தில் சச்சின், லாரா சாதனையை விராட்  கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சவுத்தாம்டன் ரோஸ்பவுல் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி 104 ரன்கள் சேர்த்தால், புதிய சாதனையை படைப்பார்.

ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 20 ஆயிரம் ரன்கள் சேர்க்க 104 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது விராட் கோலி, 19 ஆயிரத்து 896 ரன்களுடன் உள்ளார். இந்த போட்டியில் 104 எடுக்கும் பட்சத்தில் மிகக்குறைந்த போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையையும், சாதனையும் கோலி படைப்பார்.

இதற்கு முன் சச்சின், லாரா, பாண்டிங் ஆகியோர் இந்த சாதனையைச் செய்துள்ளனர். அதாவது, சச்சின், லாரா இருவரும் தங்களின் சர்வதேசபோட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை 453 இன்னிங்ஸ்களில் அடைந்தனர். ஆஸ்திரேலிய  முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ்களில் அடைந்திருந்தார்.

தற்போது கோலி 415 இன்னிங்ஸ்களில்(131டெஸ்ட், 222ஒருநாள் போட்டி, 62டி20) 20 ஆயிரம் ரன்களை எட்டும் வாய்ப்பைப் பெறுவார். இந்த போட்டியில் அடிக்க முடியாவிட்டாலும்கூட அடுத்துவரும் போட்டிகளில் கோலி அடித்தாலும் விரைவாக 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

இதுவரை இந்திய அணி மோதிய 3 போட்டிகளில் விராட் கோலி இரு அரைசதங்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலயாவுக்கு எதிராக 82 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்களும் சேர்த்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஓல்ட் டிராபோர்ட் நகரில் நடந்த போட்டியின் போது ஒருநாள் அரங்கில் 11 ஆயிரம் ரன்களை  விரைவாக  எட்டி விராட்கோலி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in