

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ரீது ராணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியோன் நகரில் வரும் 19-ம்தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
காமன்வெல்த் போட்டி மற்றும் கடந்த ஆகஸ்ட் 10-ம்தேதி பாட்டியாலாவில் நடைபெற்ற தேர்வு முகாம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரீது ராணி 184 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறார். துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தடுப்பாட்டக்காரர் தீபிகா 131 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். இந்திய அணி வரும் 13-ம் தேதி தென் கொரியாவுக்கு புறப்படுகிறது.
அணி விவரம்
கோல்கீப்பர்: சவிதா, தடுப்பாட்டம்: தீபா கிரேஸ் இக்கா, தீபிகா, சுனிதா லகரா, நமீதா டோப்போ, ஜேஸ்பிரித் கௌர், சுஷீலா சானு, மோனிகா. நடுகளம்: ரீது ராணி, லில்லிமா மின்ஸ், அமன்தீப் கௌர், சஞ்சன் தேவி தக்கோம். முன்களம்: ராணி, பூனம் ராணி, வந்தனா கேத்ரியா, நவ்ஜோத் கௌர். -பிடிஐ