

இந்திய அணியில் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த் களமிறங்கக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இடதுகை பெருவிரலில் காயமடைந்தார். இந்த காயம் குணமடைந்த 2 வாரங்கள் ஆகும் என முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில்,நேற்று தொடரில் இருந்து தவண் விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது.
ஷிகர் தவணுக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டார். இவரை அணியில் சேர்ப்பதற்கு ஐசிசியும் ஒப்புதல் கிடைத்துவிட்டதையடுத்து, நேற்றில் இருந்து அணயில் முறைப்படி பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்த சூழலில் நேற்று இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பேட்டிங் பயிற்சியில் விஜய் சங்கர் ஈடுபட, பும்ரா பந்துவீசினார். ஏற்கனவே அதிவேகத்தில் பந்துவீசும் வரும் பும்ரா , இன்ஸ்விங்கில் வீசிய யார்கர் பந்து விஜய் சங்கரின் காலை பதம்பார்த்தது. இதில் காலைப் பிடித்துக்கொண்டு விஜய் சங்கர் வலியால் துடித்தார்.
அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று, அணியின் மருத்துவர் குழு மூலம் முதலுதவி தரப்பட்டது. அதன்பின் தொடர்ந்து விஜய்சங்கர் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தார். ஆனால், மாலையில் வலியும், வீக்கமும் குறைந்துவிட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அப்படி நலமாக இருந்தால் இன்று வழக்கம் போல் விஜய் சங்கர் பயிற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும். ஆனால், பயிற்சியில் இன்று விஜய் சங்கர் ஈடுபடவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு இன்னும் நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும நிலையில், திடீரென விஜய்சங்கர் காயம் அடைந்திருப்து 4-வது இடத்தில் யாரை இறக்குவது என சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்திய அணியில் தற்போது தொடக்கம் முதல் 6-வது வரிசை வரை அனைவரும் வலதுகை பேட்ஸ்மேன்களாகவே இருக்கின்றனர். இது எதிரணிகளுக்கு பலவகையில் சாதகமாக இருக்கும். ஆதலால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்தை களமிறக்க வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏனென்றால், அரைகுறை உடற்தகுதியுடன் விஜய் சங்கரை களமிறக்க அணிநிர்வாகத்துக்கு விருப்பமில்லை என்பதால், ரிஷப் பந்த் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.