Last Updated : 24 Jun, 2019 12:15 PM

 

Published : 24 Jun 2019 12:15 PM
Last Updated : 24 Jun 2019 12:15 PM

அவமானத்தின் விளிம்புக்கு வந்துவிட்டோம்; டூப்பிளசிஸ் வேதனை: மூத்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிகிறது

பாகிஸ்தானிடம் தோற்று, உலகக்கோப்பை போட்டியில் லீக் சுற்றோடு வெளியேறி அவமானத்தின் விளிம்புக்குச் சென்றுவிட்டோம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றியது பாகிஸ்தான்.

கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பின் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் தென் ஆப்பிரிக்க அணி வெளியேறியது இதுதான் முதல் முறையாகும்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை மட்டும் வென்று 3 புள்ளிகளுடன் உள்ளது.

இந்தத் தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

''நாங்கள் பொறுப்புணர்வோடு விளையாடவில்லை என்பதைத்தான் இந்த முடிவு காட்டுகிறது. இப்படியே செல்வது மிகக்கடினம். இன்று நாங்கள் விளையாடிய விதம் எங்களை அவமானத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டது.

பந்துவீச்சில் நாங்கள் மோசமாகத்தான் செயல்பட்டோம். ஏராளமான மோசமான பந்துகளை வீசினார்கள். நாங்கள் லைன்-அண்ட் லென்த்தில் பந்துவீசி இருந்தாலே பாகிஸ்தான் வீரர்கள் திணறி இருப்பார்கள்.

10 பந்துகளுக்கு 5 பந்துகள்தான ஒழுங்காக வீசி இருப்போம். அதேபோலத்தான் பேட்டிங்கும் அமைந்தது. தொடக்கத்தை நன்றாக அமைத்துக் கொடுத்தோம். ஆனால், விக்கெட்டுகளைத் தக்கவைக்கவில்லை

நாங்கள் சராசரிக்கும் குறைவான அளவில் விளையாடியதால்தான் தொடர்ந்து அதே தவறுகளைச் செய்தோம். ஒரு அடி முன்னே வைத்துவிட்டு, இரு அடிகள் பின்னே நகர்வது நல்ல அணிக்கு அழகல்ல. சிறந்த அணியாக இருக்க முடியாது.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பையில் இதுபோன்று குறைந்த புள்ளிகளுடன் வெளியேறுவது அவமானமாக இருக்கிறது.

அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருப்பதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிகமாக விளையாட விரும்புகிறேன். நாங்கள் ஒழுங்காக விளையாடாத காரணத்தால்தான் மக்கள் எங்களை விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது.

அணியின் பயிற்சியாளர், மூத்த வீரர்கள், நான் ஆகியோர் முன்வந்து, அணிமுன் இருக்கும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். வீரர்கள் அதிகமான பொறுப்புணர்ச்சியுடன் விளையாட வேண்டும்.

எங்கள் வீரர்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். அதனால் தொடர்ந்து அதே தவறுகளைச் செய்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள். அடுத்த போட்டி என்று வரும்போது செய்த தவறுகளையே மீண்டும் செய்கிறார்கள்''.

இவ்வாறு டூப்பிளசிஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த உலகக்கோப்பை போட்டி முடிந்த உடன் தென் ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர்கள் இம்ரான் தாஹிர், டுமினி, ஸ்டெயின் ஆகியோர் ஓய்வை அறிவிப்பார்கள் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x